
கொரோனா பாதுகாப்புப் பணியில் இறந்த காவல்துறையினரின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- ''கொரோனா பணியில் ஈடுபட்டு உயிரிழந்த மருத்துவர்களுக்கு வழங்கப்படுவதைப் போலவே, முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்பட்டு, கொரோனா கால பாதுகாப்புப் பணியில் உயிர்த் தியாகம் செய்த காவல்துறையினரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கை நடைமுறைப்படுத்துபவர்கள் காவலர்கள்தான். தனிமைப்படுத்துதல், மருத்துவமனைகளில் நோயாளிகள் மற்றும் மக்களை ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட பணிகளைச் செய்வதால் அவர்கள் கொரோனா தொற்றுக்கு எளிதில் ஆளாகின்றனர்.
தமிழ்நாட்டில் 54 காவலர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். நோயிலிருந்து மக்களைக் காக்கும் பணியில் உயிர்நீத்த அவர்களின் தியாகம் இணையற்றது. அவர்களின் குடும்பங்களுக்கும் இழப்பீடு வழங்கப்படவேண்டும். பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் அனைத்து காவலர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்பட வேண்டும்” என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.