
தமிழகம் முழுவதும் ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதற்காக வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கப்பட்டு, கடந்த 15-ம் தேதியில் இருந்து முதல் தவணையாக ரூ.2000 பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் புதிய ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரண நிதியாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்திருந்தார். அதன்படி 2 லட்சத்து 14 ஆயிரத்து 950 ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.42.99 கோடி செலவில் மே மாதத்திற்கான நிவாரண தொகையை வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமைப்பு சாரா மற்றும் ஏழைய எளிய தொழிலாளர்களுக்கு விலையில்லா உணவுப் பொருட்களும், நிவாரணமாக ரூ.2 ஆயிரமும் வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்த அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுக்க தமிழ்நாடு முதலமைச்சராக இருந்தபொழுது, எனது தலைமையிலான மாண்புமிகு அம்மாவின் அரசு, தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டது. மேலும், நோய் பரவலைக் கட்டுப்படுத்த, அரசின் உத்தரவுகளை நடைமுறைப்படுத்த, குற்றவியல் விசாரணை நடைமுறைச் சட்டம் பிரிவு 144-ன்கீழ். சென்னையில் காவல் ஆணையாளர் அவர்களும், பிற மாவட்டங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர்களும், உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு முழுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.
இதனால் பொதுமக்களின் ஆதரவோடு நோய்த் தொற்று பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது. இக்காலகட்டத்தில் தினக் கூலிகள், ஆட்டோ டாக்ஸி ஓட்டுநர்கள், முடி திருத்துவோர், கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்கள், தீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள், கட்டுமான மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு ஏழை, எளிய தொழிலாளர்களின் வாழ்வாதார சிரமங்களை உணர்ந்து, அவர்களுக்கு மாண்புமிகு அம்மாவின் அரசு பல்வேறு விலையில்லா உணவுப் பொருட்கள் மற்றும் ரொக்க நிவாரண நிதி போன்றவைகள் வழங்கப்பட்டு, அவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டது.
தற்போது தினந்தோறும் 33 ஆயிரம் பேர் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிப்படைகிறார்கள். அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் தினக் கூலிகள், ஆட்டோ டாக்ஸி ஓட்டுநர்கள், முடி திருத்துவோர், கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்கள், தீப்பெட்டி மற்றும் பட்டாசுத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள், மண்பாண்டத் தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள், வெளிமாநிலத் தொழிலாளர்கள், கட்டுமான மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு ஏழை, எளிய தொழிலாளர்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். அவர்களுக்கு எந்தவிதமான நிவாரணமும் அறிவிக்கப்படவில்லை.
எனவே, கடந்த ஆண்டு எனது தலைமையிலான அம்மாவின் அரசு மேற்குறிப்பிட்ட அனைத்துத் தொழிலாளர்களுக்கும் நிவாரண உதவித் தொகை மற்றும் சிறப்பு உணவுத் தொகுப்பினை வழங்கியது போல், உடனடியாக 2,000/- ரூபாய் மற்றும் சிறப்பு உணவுத் தொகுப்பினை கொரோனா நிவாரணமாக வழங்கிட வேண்டும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.