
ஓகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நிவாரண பணிகளுக்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ஓகி புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகின்றது. சூறைக்காற்றும், மழையும் கன்னியாகுமரி மாவட்டத்தில் நீடிப்பதால் மரங்கள் அடியோடு சாய்ந்துள்ளது.
மேலும் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மாவட்டத்தின் பல பகுதிகளில் மின்சாரம், தொலைத் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
புயலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்கள் வீடுகளில் இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
மரங்கள் விழுந்து பல வீடுகள் இடிந்து விழுந்துள்ளதால் மக்கள் பெரிதும் துன்பத்தை அனுபவித்து வருகின்றனர். எனவே பாதிப்புக்குள்ளான மக்களை மீட்கவும், புயல் பாதிப்புகளை சீரமைக்க 70 பேர் கொண்ட பேரிடர் மீட்புக்குழு கன்னியாகுமரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதனிடையே புயலின் தாக்கம் குறித்து பிரதமர் மோடி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் நேற்று தொலைபேசி மூலம் கேட்டறிந்தார். அப்போது, தமிழகத்து தேவையான உதவிகளை மத்திய அரசு செய்ய தயாராக உள்ளது என உறுதியளித்தார்.
இந்நிலையில், ஓகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நிவாரண பணிகளுக்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். மின்பகிர்மான கழகம், வேளாண், நெடுஞ்சாலை, பொதுப்பணி உள்ளிட்ட துறைகளுக்கு முதல்வர் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
மேலும் பல்வேறு துறையினரை ஒருங்கிணைத்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.