கொரோனா நிவாரணமாக ரூ. 2000 வழங்கும் திட்டம்.. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று துவங்கி வைத்தார்.

By Ezhilarasan BabuFirst Published May 10, 2021, 12:10 PM IST
Highlights

கொரோனா நிவாரணமாக அனைத்து நியாய விலை கடைகளில் அரிசி அட்டைதாரர்களுக்கு முதற்கட்டமாக ரூபாய் 2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று துவங்கி வைத்தார்.  

கொரோனா நிவாரணமாக அனைத்து நியாய விலை கடைகளில் அரிசி அட்டைதாரர்களுக்கு முதற்கட்டமாக ரூபாய் 2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று துவங்கி வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில் நடைப்பெற்ற விழாவில், தலைமை செயலாளர் இறையன்பு, கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, உணவுத்துறை செயலாளர் மற்றும் தமிழக அரசின் முக்கிய அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.  தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின், தமிழகம் முழுவதும் நியாய விலைக்கடைகளில் அரசி அட்டைதாரர்களுக்கு ரூ.4000 கொரோனா நிவாரணம் வழங்குவது தொடர்பான கோப்புகளில்கையெழுத்திட்டார். 

இதில்,முதல் தவணையாக ரூபாய் 2 ஆயிரம் வழங்க தமிழக அரசு சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த வகையில், தமிழகம் முழுவதும் சுமார் 2, 07,67,000 அரிசி அட்டைதாரர்களுக்கு 4,153.39 கோடி செலவில் 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் இன்று துவங்கி வைத்தார். நாள் ஒன்றிற்கு 200 குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கப்படுவதோடு, அனைத்து நியாய விலைக்கடைகளிலும் வரும் மே மாதம் 15ம் தேதி முதல் தினமும் காலை 8மணி முதல் 12மணி வரை நிவாரண தொகை விநியோகம் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா காலக்கட்டம் என்பதால் சமூக இடைவெளியை பின்பற்றி பொதுமக்கள் நிவாரண தொகையை பெற்றுக்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் செய்ய வேண்டும் என தமிழக அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, வேறு மாவட்டத்திற்கு சென்றவர்களுக்கும் முறையாக நிவாரணம் வழங்கப்படும் எனவும், நிவாரண தொகை முறையாக பொது மக்களுக்கு சென்று சேர்கிறதா என்பதை கண்காணிக்க துணை ஆட்சியர் நிலை அலுவலர்கள் தலைமையில் கண்காணிப்பு குழு அமைத்து கண்காணிக்கவும் தமிழக அரசு சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
 

click me!