குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 கொடுக்கல.. 100 நாள் கொண்டாட்டம் வேற.. கார் பரிசு விழாவில் எல்.முருகன் அட்டாக்!

By Asianet TamilFirst Published Aug 22, 2021, 9:32 PM IST
Highlights

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 என தேர்தல் அறிக்கையில் கூறினார்கள். ஆனால், தரவில்லை என்று திமுக அரசை மத்திய இணையமைச்சர் எல்.முருகன் விமர்சனம் செய்தார்.
 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வேட்பாளரை வெற்றி பெற வைக்கும் மாவட்டத் தலைவர்களுக்கு இனோவா கார் பரிசாக வழங்கப்படும் என்று தேர்தலுக்கு முன்பு அப்போதைய தலைவர் எல்.முருகன் அறிவித்திருந்தார். சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாஜக, 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. எம் ஆர். காந்தி நாகர்கோயிலிலும், வானதி சீனிவாசன் கோவை தெற்கிலும், நயினார் நாகேந்திரன் திருநெல்வேலியிலும், சரஸ்வதி மொடக்குறிச்சியிலும் வெற்றி பெற்றனர். இதன்மூலம் 2001 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு பாஜகவினர் சட்டப்பேரவைக்குள் நுழைந்தனர்.
இந்நிலையில் பாஜக வெற்றி பெற்ற தொகுதிகளைச் சேர்ந்த ஈரோடு, திருநெல்வேலி, நாகர்கோயில், கோவை ஆகிய மாவட்ட தலைவர்களுக்கு இனோவா கார் வழங்க பாஜக தலைமை முடிவு செய்தது. இந்த நிகழ்ச்சி பாஜக தலைமையகமான கமலாலயத்தில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மகாராஜன் - திருநெல்வேலி, தர்மராஜ் - கன்னியாகுமரி, சிவசுப்பிரமணியம் - ஈரோடு, நந்தக்குமார் -கோவை ஆகியோருக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கார்களைப் பரிசாக வழங்கினார். 
இந்த நிகழ்ச்சியில் எல்.முருகன் பேசுகையில், “திமுக தேர்தல் வாக்குறுதிகளை கூறுவார்கள். ஆனால், நிறைவேற்றமாட்டர்கள். குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 என தேர்தல் அறிக்கையில் கூறினார்கள். ஆனால், தரவில்லை. ஆனால், ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் ஆகிவிட்டதை மட்டும் கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள். பாஜக அப்படியில்லை. சொன்னதைதான் செய்வோம். அதற்கு எடுத்துக்காட்டுதான் இந்த நிகழ்ச்சி” என எல்.முருகன் தெரிவித்தார். நிகழ்ச்சியில் பாஜக தலைவர் அண்ணாமலை பேசுகையில், “இந்தியாவிலேயே எங்கும் இதேபோல் நடந்தது இல்லை. ஆனால், தமிழகத்தில் பாஜக கார் பரிசாக அளிக்கிறது.” என்ரு அண்ணாமலை பேசினார்.
  

click me!