ராயபுரம் கள நிலவரம்..! அமைச்சர் ஜெயக்குமாரை வீழ்த்துவாரா ஐட்ரீம்ஸ் மூர்த்தி..!

By Selva KathirFirst Published Apr 1, 2021, 12:08 PM IST
Highlights

ஒரு காலத்தில் சென்னை ராயபுரம் தொகுதி திமுகவின் கோட்டை எனலாம். எம்ஜிஆர் காலத்திலேயே ராயபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர்கள் வென்றது இல்லை. ஆனால் கடந்த 1991ம் ஆண்டு முதல் ராயபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் ஜெயக்குமாரே போட்டியிட்டு வருகிறார். 

சென்னையை பொறுத்தவரை அதிமுகவிற்கு சாதகமான தொகுதிகளில் ஒன்றாக தற்போதும் ராயபுரம் திகழ்ந்து வருகிறது.

ஒரு காலத்தில் சென்னை ராயபுரம் தொகுதி திமுகவின் கோட்டை எனலாம். எம்ஜிஆர் காலத்திலேயே ராயபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர்கள் வென்றது இல்லை. ஆனால் கடந்த 1991ம் ஆண்டு முதல் ராயபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் ஜெயக்குமாரே போட்டியிட்டு வருகிறார். போட்டியிட்ட முதல் தேர்தலில் வெற்றி பெற்ற  ஜெயக்குமார் 1996ம் ஆண்டு திமுக வேட்பாளரிடம் தோற்றார். ஆனால் அதன் பிறகு 2001ம் ஆண்டு முதல் தற்போது வரை அனைத்து தேர்தல்களிலும் ஜெயக்குமார் தான் ராயபுரத்தை கைப்பற்றியுள்ளார்.

இதற்கு காரணம் ராயபுரம் தொகுதியில் ஜெயக்குமாருக்கு என்று இருக்கும் தனி செல்வாக்கு தான். அதிலும் மீனவர் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் அந்த தொகுதியில் உள்ள மீனவர்கள் ஜெயக்குமாரை முழுவதுமாக ஆதரித்து வருகின்றனர். இதனை தெரிந்து தான் எம்எல்ஏவாக இருந்த போதும் சரி அமைச்சராக இருக்கும் போதும் சரி தொகுதிக்கான அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றி வந்துள்ளார். இது தவிர தொகுதியில் உள்ள அனைத்து சமூகத்தினர், அமைப்புகளை சேர்ந்தவர்களிடமும் சுமூக உறவை ஜெயக்குமார் தொடர்ந்து வருகிறார். இதே போல் கட்சியினருக்கும் தேடி தேடி உதவிகளை செய்வதில் ஜெயக்குமாரை மிஞ்ச முடியாது என்கிறார்கள்.

இந்த காரணங்களால் தான் ராயபுரம் தொகுதியில் தொடர்ந்து ஜெயக்குமாரால் வெல்ல முடிகிறது. அந்த வகையில் ராயபுரத்தில் 7வது முறையாக களம் இறங்கியுள்ள ஜெயக்குமார், தேர்தல் பணிகளில் மிகவும் சுறுசுறுப்பு காட்டி வருகிறார். வழக்கம் போல் அதிமுகவினர் மட்டும் அல்லாமல் கூட்டணிக்கட்சியினரையும் சரியாக கவனித்து வருகிறார். அதே சமயம் திமுக சார்பில் ஐட்ரீம்ஸ் மூர்த்தி களம் இறக்கப்பட்டுள்ளார். செலவு விஷயத்தில் ஜெயக்குமாருக்கு ஈடுகொடுக்ககூடியவர் என்றாலும் கட்சிக்காரர்கள் எதிர்பார்த்த அளவிற்கு செலவு விஷயத்தில் அவ்வளவு தாராளம் காட்டவில்லை என்கிறார்கள். இதனால் அதிமுகவினருக்கு ஈடுகொடுக்க முடியாமல் தொகுதியில் திமுகவினர் தடுமாறுகின்றனர்.

ராயபுரம் தொகுதிகளில் காங்கிரசுக்கு என்று தனி வாக்கு வங்‘கி உண்டு. ஆனால் அதனை ராயபுரம் மனோ அதிமுக சென்ற போது தன்னுடன் அழைத்துச் சென்றுவிட்டார். அந்த வாக்குகளை இந்த முறை ஜெயக்குமார் அறுவடை செய்துவிடுவார் என்கிறார்கள். இதனால் ஐட்ரீம் மூர்த்தி வெற்றிக்கு கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். திமுகவிற்கு ஆதரவான அலை, மு.க.ஸடாலின் இமேஜ் ஆகியவற்றை மட்டுமே நம்பி மூர்த்தி வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆனால் தொகுதியில் தனது தனிப்பட்ட செல்வாக்கு மற்றும் நிறைவேற்றிய நலத்திட்டங்களை சுட்டிக்காட்டி ஜெயக்குமார் செய்யும் பிரச்சாரம் எடுபடுவதால் இங்கு மறுபடியும் ஜெயக்குமார் வெல்லவே வாய்ப்பு அதிகம்.

click me!