ரவுடி சங்கர் என்கவுண்டர் வழக்கில் அவரது தாய் நீதி மன்றத்தில் வழக்கு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி மனு

By Ezhilarasan BabuFirst Published Aug 28, 2020, 3:42 PM IST
Highlights

அயனாவரம் காவல் நிலையத்திலிருந்து சிபிசிஐடி அல்லது சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி அவரது தாயார் கோவிந்தம்மாள் வழக்கு தொடர்ந்துள்ளார். 

அயனாவரம் ரவுடி சங்கர் என்கவுண்டர்  தொடர்பாக சிபிசிஐடி அல்லது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கும், காவல் துறைக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை அயனாவரத்தை சேர்ந்த ரவுடி சங்கர் மீது கொலை முயற்சி, கஞ்சா உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில், அவரை பிடிக்க சென்ற காவலர்களை தாக்கியதால், தங்களை காத்துக்கொள்ள காவல்துறையினர் சுட்டதில் ரவுடி சங்கர் மரணமடைந்தார். ரவுடி சங்கர் என்கவுண்ட்டர் செய்யப்பட்ட வழக்கை அயனாவரம் காவல் நிலையத்திலிருந்து சிபிசிஐடி அல்லது சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி அவரது தாயார் கோவிந்தம்மாள் வழக்கு தொடர்ந்துள்ளார். தன் மகன் உடலை இரண்டாவது உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது, மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கருதியிருந்தால் காவல்துறையிடமிருந்து உடலை வாங்குவதற்கு முன்பாக  எதிர்ப்பை தெரிவிக்காமல், உடலை வாங்கி அடக்கம் செய்த பிறகு மறு உடற்கூறு ஆய்வு கோரி காவல்துறையிடம் மனு கொடுத்ததும், தற்போது நீதிமன்றத்தை  நாடியதும் ஏன் எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார். அப்போது அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன் ஆஜராகி, மாஜிஸ்திரேட் விசாரணைக்கு பிறகு அவர் முன்னிலையில் தான் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டதாகவும், முதலில் உடலை வாங்க குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மறுநாள் உடல் ஒப்படைக் கப்பட்டதாகவும் தெரிவித்தார். 

மேலும் மனுதாரரின் கோரிக்கை குறித்து அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க அவகாசம் கோரினார். மேலும் அயனாவரம் காவல் நிலைய வழக்கை சிபிசிஐடி வசம் ஒப்படைக்க ஆயத்தபணிகள் நடந்து வருவதாகவும், ஓரிரு நாட்களில் மாற்றம் செய்யப்பட்டு விடும் என தெரிவித்தார். இவற்றை பதிவு செய்த நீதிபதி, வழக்கு குறித்து தமிழக அரசும், காவல்துறையும் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
 

click me!