நீதிமன்றத்தின் முன் மன்னிப்பு கேட்டால் விடுகிறோம்: தேசியகொடி அவமதிப்பு வழக்கில் எஸ்.வி சேகருக்கு கிடுக்குபிடி.

By Ezhilarasan BabuFirst Published Aug 28, 2020, 3:08 PM IST
Highlights

எஸ்.வி.சேகர் மீது  மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில், வழக்கில் காவல் துறையினர் தன்னை கைது செய்யக் கூடும் எனக் கூறி, எஸ்.வி.சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன்  மனு தாக்கல் செய்திருந்தார்.

தேசிய கொடியை அவமதித்து பேசியதற்கு மன்னிப்பு கோரி நீதிமன்றத்தில் உத்தரவாத மனு தாக்கல் செய்ய எஸ்.வி சேகருக்கு அவகாசம் அளித்து  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எம்.ஜி.ஆர். சிலைக்கு காவி போர்வை போர்த்தியது, பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றப்பட்ட சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தலைவர்களின் சிலைகளை இவ்வாறு களங்கம் செய்வோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இது வன்மையாக கண்டிக்கத்தக்கது எனவும் தெரிவித்திருந்தார்.அதற்கு பதிலளித்த எஸ்.வி.சேகர், காவியை களங்கம் என குறிப்பிடும் தமிழக முதல்வர், களங்கமான தேசியக் கொடியைத் தான் ஆகஸ்டு 15 ம் தேதி ஏற்றப்போகிறாரா எனவும், தேசியக் கொடியில் உள்ள காவியை வெட்டி விட்டு வெள்ளை மற்றும் பச்சை நிறம் கொண்ட கொடியை ஏற்கிறாரா என்கிற வகையில் வீடியோ வெளியிட்டார். 

தேசியக் கொடியை அவமதித்தும், தமிழக முதல்வரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் பேசி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட பா.ஜ.க நிர்வாகி எஸ்.வி சேகருக்கு எதிராக, சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜரத்தினம் என்பவர்  சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில்  புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், எஸ்.வி.சேகர் மீது  மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில், வழக்கில் காவல் துறையினர் தன்னை கைது செய்யக் கூடும் எனக் கூறி, எஸ்.வி.சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன்  மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, எஸ்.வி சேகர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வெங்கடேஷ் மகாதேவன், இந்த விவகாரம் தொடர்பாக எஸ்.வி சேகருக்கு அனுப்பப்பட்ட சம்மனை தொடர்ந்து கடந்த 24 ம் தேதி மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன் ஆஜரானதாகவும், அப்போது காவல்துறை தரப்பில் அவர் பேசியது தொடர்பாக சில கேள்விகளுக்கு பதிலளிக்க  அறிவுறுத்தி படிவம் அளித்த நிலையில், இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜரான போது  பதிலளித்த படிவத்தை சமர்பித் துள்ளதாக வும் விசாரணைக்கு ஒத்துழைத்து வருவதாகவும் தெரிவித்தார். 

கடந்த 25 வருடங்களாக தேசிய கொடியை அணியாமல் அவர் எங்கும் வெளியில் சென்றதில்லை எனவும், அவர் பேசியதில் உள்நோக்கம் ஏதுமில்லை எனவும் தெரிவித்தார். தொடர்ந்து, மத்திய குற்றப்பிரிவு காவல்துறை சார்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ. நடராஜன், தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் இனி பேசமாட்டேன், இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாது என எஸ்.வி சேகர்  உத்தரவாதம் அளிப்பதோடு, நடந்தவற்றுக்கு நீதிமன்றத்தின் முன் அவர் மன்னிப்பு கோரினால் முன்ஜாமீன் வழங்கலாம் எனவும், அதே நேரத்தில் வழக்கை ரத்து செய்ய வாய்ப்பில்லை எனவும் தெரிவித்தார். காவல்துறையின் வாதத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இது தொடர்பாக எஸ்.வி சேகர் சார்பில் உத்தரவாதம் அளிக்க அவகாசம் அளித்து விசாரணையை செப்டம்பர் 1 ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

 

 

click me!