
சென்னை மலையம்பாக்கத்தில் அரிவாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடி தலைமறைவான ரௌடி பினு இன்று அம்பத்தூர் காவல் துணை ஆணையர் முன்பு சரணடைந்தார். பினுவை சுட்டுப் பிடிக்க உத்தரவிட்டப்பட்டதால் உயிருக்கு பயந்த பினு சரணடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை பள்ளிக்கரணை பகுதியில், கடந்த 6 ஆம் தேதி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் ரெளடி பல்லு மதன் என்பவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் பிரபல ரௌடி பினுவின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ளச் செல்வது தெரியவந்ததது. அந்த பிறந்த நாள் விழாவில் செள்ளையில் உள்ள அத்தனை ரௌடிகளும் கலந்து கொள்ள உள்ளதும் போலீசாருக்கு தெரியவந்தது.
இது குறித்து தகவலறிந்த காவல் ஆணையர், அம்பத்தூர் காவல் துணை ஆணையர் சர்வேஸ்ராஜ் தலைமையில் தனிப்படை அமைத்து, பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபடும் ரௌடிகளை கைது செய்ய உத்தரவிட்டார்.
இதையடுத்து சர்வேஸ்ராஜ் தலைமையில் உதவி காவல் ஆணையர்கள் கண்ணன், நந்தகுமார் மற்றும் 10 காவல் ஆய்வாளர்கள் உள்பட 50 போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு ரௌடிகளை சுற்றி வளைத்துப் பிடிக்க தயாராயினர்.
காவல் துறை வாகனத்தில் சென்றால் ரெளடிகள் அனைவரும் தப்பிவிடலாம் என்பதால் வாடகைக் கார்களில் சம்பவ இடத்துக்குச் சென்றனர். மின் விளக்கில் ஜொலித்த ரௌடி பினுவின் பிறந்த நாள் விழா அரங்கில், ரெளடி பினு, அரிவாளால் கேக் வெட்டியுள்ளார்.
இச்சந்தர்ப்பத்தை எதிர்நோக்கிக் காத்திருந்த போலீஸார் அப்பகுதியை உடனடியாக சுற்றி வளைத்தனர். பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த ரெளடிகள், துப்பாக்கி முனையில் தாங்கள் போலீஸாரால் சுற்றி வளைக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்து தப்பியோடினர். இதில் ஒரு சிலர் தப்பியோடி வடக்கு மலையம்பாக்கம் ஊருக்குள் தலைமறைவாயினர்.
இந்த அதிரடி வேட்டையில் முக்கிய ரௌடிகளான பினு, அவரது கூட்டாளிகள் கனகு (எ) கனகராஜ், விக்கி (எ) விக்னேஷ் ஆகிய 3 பேரும் தலைமறைவாயினர். இருப்பினும், பினுவின் ஆதரவாளர்களான கென்னடி, மாட்டு சங்கர், ரத்தினம், சித்தார்த், அந்தோனி (எ) டென்னிஸ், ஹரிசேகர், சரவணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
தப்பியோடிய ரௌடிகளை போலீசார் தேடி வந்தனர். ஒரு சில ரௌடிகள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் முக்கிய ரௌடியான பினு போலீசுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு தலைமறைவாக இருந்தார்.
ஆனால் போலீசார் பினுவை சுட்டுப்பிடிக்க உத்தரவிட்டனர். இதனால் பயந்துபோன பினு, இன்று காலை அம்பத்தூர் காவல் துணை ஆணையர் சர்வேஸ்ராஜ் முன்பு சரணடைந்தார்.
பினு மீது 3 கொலை வழக்குகளும் ஏராளமான கொலை முயற்சி வழக்குகளும், வழிப்பறி வழக்குகளும் உள்ளன. தற்போது பினு சரணடைந்துள்ளதால் அவருக்கு பின்னணியில் இருந்து இயக்குவது யார்? அவரது அடுத்த திட்டம் என்பது குறித்த தகவல்கள் வெளி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.