
இடைத் தேர்தல் நடைபெறும் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு டி.டி.வி.தினகரன் தரப்பினர், நாள்தோறும் விதவிதமான பரிசுகளை அள்ளி வழங்கி வருவதால் இன்று என்ன பரிசு கிடைக்குமோ என ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
ஜெயலலிதா மறைந்ததையடுத்து ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் 12 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதிமுக உடைந்ததையடுத்து சசிகலா அணி சார்பில் டி.டி.வி.தினகரனும், ஓபிஎஸ் அணி சார்பில் மதுசூதனனும் போட்டியிடுகின்றனர்.
இந்த தேர்தலில் , எப்படியும் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற துடிப்புடன், டி.டி.வி.தினகரன் தரப்பினர், பணத்தை அள்ளி இறைத்து வருவதாக கூறப்படுகிறது.
இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதால் அவர்களும் கண் கொத்தி பாம்பாக தொகுதி முழுவதும் வலம் வருகின்றனர். மேலும் திமுகவினரும்,ஓபிஎஸ் அணியினரும் பணம் கொடுப்பதை தடுத்து நிறுத்தி வருகின்றனர்.
ஆனாலும் அவர்களின் கண்களில் மண்ணைத்தூவிவிட்டு பணப்பட்டுவாடா செய்து வரம் தினகரன் தரப்பினர், நூதன முறையில் பரிசுப் பொருட்களையும் வழங்கி வருகின்றனர்
இரண்டு நாட்களுக்கு முன்பு, 38வது வார்டில் வீடுதோறும் சென்று, குத்துவிளக்கு பூஜைக்கு வரும்படி, பெண்களுக்கு அழைப்பு விடுத்தனர்.
பூஜைக்கு வந்தோருக்கு இரண்டு சேலைகள், வெள்ளி காமாட்சியம்மன் விளக்கு, தீபாராதனை தட்டு, மணி, துாபக்கால் என, பூஜை பொருட்கள், குங்குமம், விபூதி போன்ற வற்றை வழங்கினர்.
குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, தினம் ஒரு பரிசுப் பொருளை வழங்கி வருகின்றனர். ஒரு நாள், மளிகை பொருட்கள் வாங்க தொகை; ஒரு நாள் சேலை; ஒரு நாள் காமாட்சியம்மன் விளக்கு என, தினமும் ஒரு பரிசுப் பொருள் வழங்குகின்றனர். மேலும் பிலிப்கார்ட், அமேசான் போன்ற நிறுவனங்களுக்கு பொருட்களை ஆர்டர் செய்து அதை நேரடியாக வாக்காளர்களின் வீடுகளுக்கு அனுப்பி வருகின்றனர்
வெளி மாவட்டங்களில் இருந்து வந்தோர், இந்த பணியில் ஈடு படுகின்றனர். இதனால், இன்று என்ன பரிசு தேடி வரும் என, எதிர்பார்ப்போடு வாக்காளர்கள் காத்திருக்கின்றனர்.
இதேபோல் பள்ளி, கல்லுாரி மாணவர்களை, பிரசாரத்திற்கு அழைத்து சென்று அவர்களுக்கு ஒவ்வொரு நாளும் 300 ரூபாய் வழங்குகின்றனர். இப்படி ஒவ்வொரு நாளும் புதுப்புது யுக்தியை கையாண்டு வாக்காளர்களை கவர்ந்து வரும் தினகரன் தரப்பினரிடம் இருந்து அடுத்து என்ன கிடைக்கும் என வாக்காளர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.