
ஆர்,கே,நகர் இடைத்தேர்தலில், பல்வேறு மன போராட்டங்களுக்கு பிறகே வேட்பாளராக களம் இறங்கினார் தினகரன். இதில் வெற்றி பெற்றால், முதல்வர் நாற்காலியில் அமர்ந்து விடலாம் என்பதே அவர் கணக்கு.
ஆனாலும், தொகுதியில் இக்கட்டான நிலையிலேயே அவர் இருந்தார். ஜெயலலிதா மரணம் தொடர்பான மக்களின் சந்தேகங்களும், கோபமும் சசிகலா குடும்பத்தினர் மீது அப்படியே தொடர்ந்து கொண்டிருக்கிறது.
அதை சமாளிப்பதுதான், தினகரனுக்கு முதன்மையான வேலையாக முன்னால் வந்து நின்றது.
அதற்காக, 1999-ல் பெரியகுளம் நாடாளுமன்றத் தேர்தலில், தமக்காக, ஜெயலலிதா பிரச்சாரம் செய்த வீடியோ காட்சிகளை, தொகுதி மக்களுக்கு திரையிட்டுக் காட்டலாம் என்று தினகரன் நினைத்தார்.
அதன்மூலம், ஒட்டுமொத்த பெண் வாக்காளர்களையும் கவர்ந்தாக வேண்டும் என்பது அவரது திட்டமாக இருந்தது.
ஆனால், அந்த பிரச்சார சி.டி. யை ஜெயா தொலைக்காட்சி அலுவலகத்தில் வலைவீசி தேடியும் கிடைக்கவில்லை.
அதையடுத்து மற்றொரு, தனியார் தொலைக்காட்சியில் இருக்கலாம் என்று தகவல் கிடைக்க, அங்கும் ஆட்களை அனுப்பி கொண்டு வர முயற்சி செய்தார்.
ஆனால், மழைவெள்ளத்தில், பழைய ஆவணங்கள் எல்லாம் தண்ணீரில் சேதமாகிவிட்டன என்பதால், உடனே பார்க்கமுடியவில்லை. எனவே கிடைத்தால் தருகிறோம் அவர்கள் சொல்லிவிட்டனர்.
ஆனாலும், அந்த சி.டி யை பகீரத பிரயத்தனம் செய்து, பல சோர்ஸ்களிலும் இடைவிடாமல் தேடிக்கொண்டே இருந்தார்.
விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என்பது போல, தற்போது அந்த சி.டி அவரது கைக்கு கிடைத்து விட்டது.
அதன் பிறகு, சசிகலா அணி தொழில் நுட்ப பிரிவின், கிராபிக்ஸ் மற்றும் நகாசு வேலைகளுடன், தற்போது அந்த சி.டி காட்சிகள், ஆர்.கே.நகர் மக்களின் பார்வைக்கு வந்துள்ளது.
கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும், தேடுங்கள் கிடைக்கும் என்ற வகையில், தினகரன் தேடியது கிடைத்து விட்டது. ஆனால் அவர் நினைத்தது நடக்குமா? என்பதுதான் தற்போதைய கேள்வி?