
உத்தரப்பிரதேச விவசாயிகளின் பயிர்கடன் ரூ. 36 கோடியை தள்ளுபடி செய்து, முதல்வர் ஆதித்யநாத் அறிவித்ததை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி வரவேற்றுள்ளார்.
உத்தரப்பிரதேச முதல்வராக பதவி ஏற்ற யோகி ஆதித்யநாத் முதல்முறையாக நேற்றுமுன்தின் அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டினார். அந்த கூட்டத்தின் முடிவில், சிறு, குறு விவசாயிகளின் பயிர்கடன் ரூ.36 ஆயிரத்து 359 கோடி தள்ளுபடி செய்யப்படுவதாக முதல்வர் ஆதித்யநாத் அறிவித்தார். இந்த அறிவிப்பு அந்த மாநில விவசாயிகள் மத்தியில் பெரிய ஆதரவைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், உ.பி. முதல்வர் ஆதித்தியநாத்தின் பயிர் கடன் தள்ளுபடி அறிவிப்புக்கு காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
டுவிட்டரில் அவர் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், “ முதல்வர் ஆதித்யநாத்தின் பயிர்கடன் தள்ளுபடி அறிவிப்பு உத்தரப்பிரதேச விவசாயிகளுக்கு பாதியளவு ஆறுதலைத் தரும். ஆனால், சரியான பாதையில் அடியெடுத்து வைத்து இருக்கிறார் ஆதித்யநாத். காங்கிரஸ் கட்சி எப்போதும் விவசாயிகளுக்கும், விவசாயிகளின் கடன் தள்ளுபடிக்கும் ஆதரவும் அளிக்கும்.
நான் மகிழ்ச்சி அடைகிறேன். பாரதிய ஜனதாகட்சி கடன் தள்ளுபடி செய்ய உந்தப்பட்டுள்ளது. ஆனால், இதில் அரசியல் செய்யாமல், நாடுமுழுவதும் அனைத்து மாநிலங்களிலும் பாதிக்கப்படும் விவசாயிகளின் கடனையும் மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்.
மாநிலங்களுக்கு இடையே பாகுபாடு பார்க்காமல், விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ள கவலையை போக்கும் விதத்தில் மத்திய அரசு கடன் தள்ளுபடி குறித்த பதிலை தெரிவிக்க வேண்டும்’’ எனத் தெரிவித்தார்.