
பணப்பட்டுவாடாவைத் தடுக்க என்ன பண்ணப் போறீங்க? ராஜேஸ் லக்கானியை நெருக்கிய தமிழிசை…
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி சட்ட மன்ற இடைத்தேர்தலில் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. மருது கணேஷ், டி.டி.வி தினகரன், மதுசூதனன், கங்கை அமரன் உள்ளிட்டோர் களத்தில் உள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பணப்பட்டு வாடா செய்யப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.
பணம் மட்டுமல்லாமல் பல்வேறு விதமான பரிசுப் பொருட்களும் தாராளமான விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.
மேலும் பணபட்டுவாடா செய்ததது தொடர்பாக இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டு வருவது குறித்து, தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை சந்தித்து புகார் மனு கொடுத்தார்.
அதில், ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுகிறது. அதை தடுத்து நேர்மையான முறையில் தேர்தல் நடத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது..
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன் , ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுகவின் 2 பிரிவுகளும், திமுக.வும்பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டுள்ளனர். வேறு வேறு விதமாக அங்கு பணப்பட்டு வாடா நடைபெறுகிறது. பரிசு பொருட்களும் வழங்கப்படுகிறது.
அதிக அளவில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டாலும் அங்கு பணப்பட்டுவாடா நடக்கிறது. ஏழை மக்களின் வறுமையை பயன்படுத்தி கொள்ள திமுக, அதிமுக கட்சிகள் நினைப்பதாக குற்றம்சாட்டினார்.
வீடுகளில் அடையாள குறியிட்டு தேர்தல் முடிந்ததும் குலுக்கல் முறையில் வீடு தருவதாக கூறி வாக்கு கேட்கிறார்கள் என்றும். இது ஒரு அபாயகரமான வாக்குறுதி என்றும் தெரிவித்த தமிழிசைமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெயருக்கு இவர்கள் களங்கம் ஏற்படுத்துவதாக தெரிவித்தார்.