
ஜெயலலிதா மறைவையடுத்து வரும் 12 ஆம் தேதி ஆர்,கே.நகர் தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.இந்த தேர்தலில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, படகு சின்னத்தில் போட்டியிடுகிறார்.
இதையடுத்து தீபா தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில், ஜெ.தீபா பேரவையின் உயர்மட்ட குழு நிர்வாகி பசும்பொன் பாண்டியன், சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்து உள்ளார்.
அதில் கடந்த 28ம் தேதி ஜெ.தீபாவிடம் செல்போனில் பேசிய மர்ம நபர் ஒருவர், தேர்தல் பிரசாரத்தை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும், இல்லையென்றால் கொலை செய்து விடுவோம் என்றும் மிரட்டல் விடுத்துவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார் என குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் மீண்டும் கடந்த 2ம் தேதி செல்போனில் பேசிய மர்ம நபர் ஒருவர் தீபாவை தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை செய்துவிடுவதாக மிரட்டி விட்டு இணைப்பை துண்டித்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
மிரட்டல் விடுத்த செல்போன் எண்ணை சோதனை செய்தபோது, அந்த மர்ம நபர் முக்கிய அரசியல் கட்சி தலைவர்களுடன் தொடர்புடைய முகமது என்பவர் தான் என தெரியவந்ததாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே தீபாவிற்கு கொலை மிரட்டல் விடுத்த முகமது என்பவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து அவரை கைது செய்ய வேண்டும் என புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் தீபாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்.கே. நகர் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி பிரவீண் நாயரிடமும் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.