அச்சத்தில் ஆர்.கே.நகர்வாசிகள்... விரல்ல மை இல்லைன்னா கொடுத்தத துரத்தி துரத்தி திருப்பிக் கேக்கறாங்களாம்!   

First Published Dec 22, 2017, 3:41 PM IST
Highlights
rk nagar voters was threaten by local party people who had not voted for their party


ஆர்.கே.நகர் தேர்தல் ஒருவழியாக சண்டை சச்சரவுகள் இன்றி முடிந்துவிட்டது. ஆனால் தேர்தல் முடிந்த பின்னர்தான் அடுத்த கட்ட சண்டைகள் தொடங்கியிருக்கின்றன. 

ஆர்.கே.நகர் தொகுதியில் ஆளும் கட்சிக்காக தேர்தல் பணி செய்தவர்களில் பலருக்கு பாக்கி பணம் கொடுக்காமல் மதுரை  தேர்தல் பொறுப்பாளர்கள் தப்பி ஓடிவிட்டார்களாம். எனவே, தேர்தலுக்காக பணியாற்றிய உள்ளூர்  நிர்வாகிகள் இனி வரும் தேர்தலில் டிடிவி அணிக்கு ஆதரவாக செயல்பட போகிறார்களாம். இப்படி ஒரு தகவல் ஆர்.கே.நகரில் ரவுண்டு கட்டி வர, தொகுதிக்குள் வேறு மாதிரியான தகவல் இப்போது பகீர் கிளப்பியுள்ளது.

நேற்று டிச.21ம் தேதி வாக்குப் பதிவு முடிவடைந்ததை அடுத்து,  258 வாக்குச் சாவடிகளிலும் பதிவான வாக்குப் பதிவு இயந்திரங்கள், அனைத்தும் ராணி மேரி கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இங்கே வரும் 24ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற வுள்ளது. 

இந்நிலையில், வழக்கமான நிலையில் இல்லாமல், ஆர்.கே.நகரில் வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது. சுமார் 78 சதவீதம் வாக்குகள் எப்படி உயர்ந்தன என்பது இப்போது பரவலாகப் பேசப்படும் விஷயம். முன்னதாக நடைபெற்ற  சட்டமன்ற தேர்தலின் போது, அல்லது ஜெயலலிதா போட்டியிட்ட போதான தேர்தலின் போது இவ்வளவு வாக்கு சதவீதம் இருந்ததில்லை. 

இந்நிலையில், இங்கே  78 சதவீதம் வாக்குகள் எப்படி பதிவாகின என்பது குறித்த,  தொகுதிக்குள் சுவாரஸ்யமாக உலாவரும் தகவல் இதுதான்!

ஆர்.கே.நகரில் தங்கள் கட்சி நபர் அல்லது கட்சிக்காரர்கள் என்பதாக கணக்கிட்டு, ஒவ்வொருவருக்கும் ரூ. 6 ஆயிரம் முதல் பணப் பட்டுவாடா நடந்துள்ளதாம். தொகுதிக்குள் பணமழையை மும்முனைத் தாக்குதலாக நடத்தியிருந்தாலும், பணம் பெற்றவர்களிடம் அந்த அந்தக் கட்சிக் காரர்கள் சத்தியம் வாங்கிக் கொண்டார்களாம். இதனால் வாக்காளர்கள் கட்சியினருக்கு வாக்களிக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானார்களாம். 

இந்நிலையில், வாக்காளர்கள் தங்கள் விரலில் வைக்கப்பட்ட மையைக் காட்டி, தாங்கள் வாக்களித்ததற்கான சான்றை கட்சி நிர்வாகிகளிடம் காட்ட வேண்டுமாம். இதனால்தான் தேர்தலின் போது, வாக்காளர்கள் பயந்து போய் கூட்டம் கூட்டமாக வாக்களிக்க வந்தார்களாம்.   

இருப்பினும், வாக்களிக்க வந்தும்  கடைசி நேரத்தில் வாக்களிக்க இயலாமல் போனவர்கள், வாக்களிக்காமல் போன கூலித் தொழிலாளிகள் உள்ளிட்டோரை, வீடு வீடாகச் சென்று சோதித்து வருகிறார்களாம்.  இப்படி காசு வாங்கியும் வாக்களிக்காமல் போனவர்களிடம் இருந்து பணத்தை திருப்பித் தருமாறு கூறி, நிர்வாகிகள் சிலர் மிரட்டி வருவதாகக் கூறப்படுகிறது.

எனவே இவர்களுக்கு பயந்து, பலரும் வீடுகளை விட்டு வெளியிடங்களுக்குச் சென்றிருப்பதாகவும், நெருக்கடிக்கு மத்தியில் வேறு வழி தெரியாமல் அவர்கள் இவ்வாறு வெளியில் சென்று விட்டதாகவும் பரபரப்பாகப் பேசப்படுகிறது. எனவே இந்த விவகாரத்தில்  தேர்தல் ஆணையமும் காவல் ஆணையரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோருகிறார்களாம்!
 

click me!