
இடைத்தேர்தல் என்றாலே, ஆளும் கட்சிக்குதான் சாதகமாக இருக்கும் என்ற இலக்கணத்தை உடைக்க திமுகவும், ஓ.பி.எஸ் அணியும் கடுமையாக போராடி வருகின்றன.
கட்சியையும், ஆட்சியையும் தக்க வைத்துக்கொள்ள, எப்படியாவது வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற வெறியில் தீயாய் வேலை செய்து வருகிறார் தினகரன்.
திமுகவை பொறுத்த வரை, இந்த தேர்தல் என்பது ஸ்டாலின் தலைமைக்கும், அவரது அரசியல் அனுபவத்திற்கும் சவால் விடும் தேர்தலாக அமைந்துள்ளது.
தினகரன் மற்றும் மதுசூதனன் போன்றவர்களுக்கு ஈடுகொடுக்கும் அளவுக்கு, மருது கணேஷ் வலுவான வேட்பாளர் இல்லை என்பது திமுகவுக்கு பலவீனமாக உள்ளது.
அதே சமயம், அதிமுக மூன்றாக பிளவு பட்டு நிற்கும் நிலையில், வெற்றியை எளிதாக தம் வசமாக்கலாம் எண்டு ஸ்டாலின் உறுதியாக நம்புகிறார்.
ஒருவேளை, மருது கணேஷ் தோல்வியை சந்தித்தால், கட்சியில், அது ஸ்டாலின் தலைமைக்கும், ஆளுமைக்கும் எதிராக கேள்வி எழுப்ப வாய்ப்பை உருவாக்கும் என்ற அச்சமும் உள்ளது.
ஓ.பி.எஸ் அணியை பொறுத்த வரை வெற்றி பெற்றால், சசிகலா அணியை சிதைத்து, கட்சியையும், சின்னத்தையும் கைப்பற்றும் முயற்சிக்கு பலம் சேர்க்கும்.
தோல்வியை சந்தித்தாலும், தினகரனை விட, சற்று அதிகமாக ஒட்டு வாங்கினால் கூட, அது பெரிய விஷயமாகத்தான் பார்க்கப்படும்.
ஆனால், மிகப்பெரிய அச்சுறுத்தலில் சிக்கி இருப்பவர் தினகரன் மட்டுமே. குடும்ப உறுப்பினர்களின் எதிர்ப்பை மீறி, அவர் களத்தில் குதித்துள்ளார்.
வெற்றி பெறாமல் தோற்றால் கூட, இரட்டை இலை சின்னம் இல்லாத நிலையை சுட்டி காட்டலாம். ஓ.பி.எஸ் அணியை விட குறைவான வாக்குகள் பெற்றால், கட்சியில் அவருடைய பதவிக்கும் சிக்கல் வரலாம்.
தீபாவை பொறுத்த வரை, இது அவருக்கு முதல் தேர்தல், குறைந்த பட்சம் டெபாசிட்டாவது வாங்கினால் மட்டுமே, அவரது அடுத்தடுத்த முயற்சிகளுக்கு ஆதரவு கிடைக்கும்.
ஒட்டுமொத்தமாக பார்த்தால், ஸ்டாலின், ஓ.பி.எஸ், தினகரன், தீபா ஆகிய நான்கு பேரின் தலைமை மற்றும் ஆளுமையை நிர்ணயிக்கும் தேர்தலாகவே ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பார்க்கப்படுகிறது.
அதனால், பண மழை, ஜெயலலிதா மர்ம மரணம், தலைமை இல்லாத அரசு என வியூகம் அமைத்து ஒவ்வொரு கட்சியும், ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களை வலம் வந்து கொண்டிருக்கின்றன.