
நெடுஞ்சாலை ஓரமுள்ள மதுக்கடைகளை மூட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதற்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் 220 மீட்டர் தொலைவிற்குள் இருக்கும் அனைத்து மதுபானக் கடைகளையும் மூட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் சுமார் 1300க்கும் அதிகமான கடைகள் நேற்று மூடப்பட்டன. இந்தக் கடைகளை கிராமப் பகுதிகளுக்குள் அமைக்க தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைக்கு பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் முழு மனதுடன் மதுக்கடைகளை அதிமுக அரசு மூடுவது தான் மக்களுக்கு நன்மை பயக்கும் என்று தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மதுக்கடைகளை மூட உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்கிறேன். மூடப்பட்ட மதுக்கடையில் பணியாற்றிய ஊழியர்களுக்கு மாற்றுப் பணி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திமுக ஆட்சியில் மதுக்கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. நெடுஞ்சாலையில் மதுக்கடைகளை மூட முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதாடியது." இவ்வாறு தனது அறிக்கையில் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.