
டிசம்பர் 21-ம் தேதி ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா மறைந்தார். அதுமுதல், கடந்த ஓராண்டாக ஆர்.கே.நகர் தொகுதி காலியாக உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற இருந்தது. பணப்பட்டுவாடா புகார் காரணமாக இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
அதன்பிறகு, தேர்தல் நடத்தப்படவில்லை. இதுதொடர்பாக டிசம்பர் இறுதிக்குள் இடைத்தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் டிசம்பர் 21-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பான தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, நவம்பர் 27 முதல் டிசம்பர் 4 வரை வேட்புமனுத்தாக்கல் செய்யலாம். வேட்புமனுவை திரும்பப்பெற கடைசி நாள் டிசம்பர் 7-ம் தேதி.
டிசம்பர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டு, டிசம்பர் 24-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.