கழுத்தை பிடித்து வெளியே தள்ளுவதற்குள்..! குஷ்புவுக்கு அதிகரிக்கும் நெருக்கடி! காங்கிரசில் இருந்து பாஜகவா?

By Selva KathirFirst Published Aug 1, 2020, 9:19 AM IST
Highlights

கடந்த சில நாட்களாக காங்கிரசில் இருந்து கொண்டே அந்த கட்சிக்கு எதிரான கருத்துகளை கூறி வரும் நடிகை குஷ்புவை காங்கிரசில் இருந்து வெளியேற்றுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

கடந்த சில நாட்களாக காங்கிரசில் இருந்து கொண்டே அந்த கட்சிக்கு எதிரான கருத்துகளை கூறி வரும் நடிகை குஷ்புவை காங்கிரசில் இருந்து வெளியேற்றுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

எந்த விஷயத்தை எங்கு பேச வேண்டும் என்பது நடிகை குஷ்புவுக்கு எப்போதுமே தெரியாது. எல்லாம் தனக்குத்தான் தெரியும் என்கிற ரீதியில் பேசுபவர் குஷ்பு. மற்ற யாருக்கும் அறிவே கிடையாது தனக்கு மட்டுமே அறிவு உள்ளது என்கிற தொனி அவரது பேச்சில் தெரியும். மேலும் எங்கு சென்றாலும் அந்த இடத்தில் தான் தான் பெரிய சூப்பர் ஸ்டார் என்கிற நினைப்புடனும் அந்த நிகழ்ச்சியே தனக்காகத்தான் நடத்துகிறார்கள் என்றும் நடிகை குஷ்பு செயல்படுவதும் அனைவரும் அறிந்த ஒன்று தான்.

கற்பு குறித்து பேசி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளிடம் வாங்கிக் கட்டிக் கொண்டது, திமுக பொதுக்குழு குறித்து பேட்டி அளித்து ஸ்டாலின் ஆதரவாளர்களால் விரட்டி விரட்டி தாக்கப்பட்டது என நடிகை குஷ்புவின் எல்லை மீறிய செயல்கள் ஏராளம் ஏராளம். சினிமாவில் தான் கதாநாயகியாக நடித்த காலத்தில் எப்படி படப்பிடிப்புதளத்தில் நடந்து கொள்வாரோ அதே மாதிரி தான் இப்போது அரசியல் களத்திலும் தன்னை பெரிய கதாநாயகி போல் கருதி செயல்பட்டு வருகிறார் குஷ்பு.

காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த சில நாட்களிலேயே ஏதோ காங்கிரஸ் கட்சிக்கு தன்னால் மிகப்பெரிய கவுரவும் கிடைத்துவிட்டது போல் பேசிக் கொண்டிருந்தார். ஈவிகேஎஸ் இளங்கோவன் கட்சியில் ஓரங்கட்டப்பட்ட போது அவருக்கு ஆதரவாக இருப்பதாக நினைத்துக் கொண்டு அப்போதைய தலைவர் திருநாவுக்கரசரை வம்புக்கு இழுத்தார் குஷ்பு. இந்த விவகாரம் டெல்லி மேலிடம் வரை சென்ற நிலையில் அங்கு குஷ்புவை அழைத்து வாயை அடக்குமாறு கூறி அனுப்பி வைத்தனர்.

சாதாரண செய்தி தொடர்பாளராக இருந்து கொண்டு காங்கிரஸ் கட்சி எப்படி செயல்பட வேண்டும்? எப்படி செயல்படக்கூடாது என்று ஏதோ பரம்பரை காங்கிரஸ்காரர் போலவும் குஷ்பு  பேச ஆரம்பித்தார். இதனால் குஷ்புவை தமிழக காங்கிரஸ் ஒதுக்கியது. இதனால் கட்சியின் தேசிய செயல்பாடுகளில் மட்டும் கவனம் செலுத்தி வந்த குஷ்பு, கடந்த மாதம் திடீரென கட்சியில் உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை என்கிற ரீதியில் ட்வீட் செய்தார். வெளிப்படையாக கட்சித் தலைமைக்கு எதிராக பேசிய குஷ்புவை அப்போது யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

இந்த நிலையில் புதிய கல்விக் கொள்கையை ஆதரித்து பொதுவெளியில் குஷ்பு போட்ட ட்வீட் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளை கொதிக்கச் செய்துள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி முதல் கரூர் எம்பி ஜோதிமணி வரை அனைவருமே புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக முழங்கி வருகின்றனர். அவர்களின் நிலைப்பாடு தான் கல்விக் கொள்கை விவகாரத்தில் காங்கிரசின் நிலைப்பாடாக கருதப்படுகிறது. ஆனால் வழக்கம் போல் திடீரென ஒரு ட்வீட் போட்டு, புதிய கல்விக் கொள்கைக்கு காங்கிரஸ் ஆதரவு என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிட்டார் குஷ்பு.

கேட்டால் அது தனிப்பட்ட கருத்து, அனைத்து விஷயங்களிலும் கட்சித் தலைமை கூறுவதை ஏற்க முடியாது, காங்கிரஸ் ஜனநாயக கட்சி என்கிற ரீதியில் அந்து போன ரீலை மறுபடியும் ஓட்ட ஆரம்பித்துள்ளார். குஷ்புவுக்கு காங்கிரஸ் மேலிடம் கொடுத்துள்ளது ஒரு பொறுப்பான பதவி. அனைத்து விஷயங்களிலும் காங்கிரஸ் மேலிடத்தில் நிலைப்பாட்டை தெளிவாக எடுத்துக்கூற வேண்டிய செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருக்கிறார் குஷ்பு. அப்படி இருக்கையில் பொதுவெளியில் அவர் கூறும் எந்த ஒரு விஷயமும் கட்சியின் கருத்தாகவே எடுத்துக் கொள்ளப்படும். இந்த சிறிய அறிவு கூட இல்லாமல் பொதுவெளியில் ஒரு கருத்தை கூறிவிட்டு அது உட்கட்சி ஜனநாயகம் என்று உளறி வருகிறார் குஷ்பு.

குஷ்புவின் இந்த பேச்சு கே.எஸ்.அழகிரியை டென்சன் ஆக்கியுள்ளது. மேலும் குஷ்பு மீது நடவடிக்கை எடுக்குமாறு டெல்லி மேலிடத்திற்கு அவர் பரிந்துரைத்துள்ளதாக கூறுகிறார்கள். ஏற்கனவே திருநாவுக்கரசர் இருந்த போதும் குஷ்பு மீது புகார் அளிக்கப்பட்டது. இப்படி தொடர் புகார்களால் தர்மசங்கடம் ஏற்படுவதை தவிர்க்க குஷ்புவிடம் இருந்து செய்தி தொடர்பாளர் பதவி பறிக்கப்படும் என்றும் இதன் மூலம் அவராகவே காங்கிரசில் இருந்து வெளியேற அதாவது கழுத்தை பிடித்து வெளியே தள்ளுவதற்குள் என்கிற நிலையை ஏற்படுத்த காய் நகர்த்தப்படுகிறது.

click me!