
பரப்புரை முடித்து திரும்பியவர்கள் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. திட்டமிட்டப்பட்ட கொலை என பலியானவரின் உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் நாளையுடன் பிரசாரம் ஓய்கிறது. அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேட்சைகள் போட்டி போட்டு இறுதிகட்ட ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். செண்டை மேளம் முழங்க ஆடிப் பாடியும், வீதி, வீதியாக நடந்து சென்று தொழிலாளர்கள், விவசாயிகள், வணிகர்களை நேரில் சந்தித்து வேட்பாளர்கள் ஆதரவு திரட்டி வருகின்றனர்.
அனல்பறக்கும் பரப்புரைக்கு மத்தியில் ஒரு சில இடங்களில் மோதல்களும் வெடித்துள்ளன. கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்திய அடுத்த கடம்பூர் ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் இந்திராணி, வைத்தியநாதன் ஆதரவாளர்கள் இடையே நீண்ட நாட்களாக பகை இருந்து வருவதகக் கூறப்படுகிறது.
இந்தநிலையில் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் நடைபெற்ற மோதலில் ஒருவர் பலியாகியிருக்கிறார். வைத்தியவாதன் ஆதரவாளரான வீராசாமி என்பவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவிட்டு திரும்பியபோது கார் விபத்தில் சிக்கியுள்ளார். இந்த விபத்தில் வீராசாமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்துவிட்டார். படுகாயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது விபத்து அல்ல இந்திராணியின் ஆதரவாளர்கள் திட்டமிட்டு செய்த கொலை என்று வீராசாமியின் உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். பிரசார கலத்தில் மரணங்கள் தொடங்கியிருப்பது கடம்பூரில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.