ராஜேந்திர பாலாஜி கைதில் பழிவாங்கல்... அறிவாலயத்துக்கு ஷாக் கொடுத்த சிவகாசி திமுக உறுப்பினர்..!

By Thiraviaraj RMFirst Published Jan 12, 2022, 3:18 PM IST
Highlights

கட்சி நிர்வாகம், ஆட்சி நிர்வாகம் திருப்தி இல்லை என்பதால் தி.மு.க.,விருந்து விலகிக்கொள்கிறேன்

முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை அரசியல் காழ்ப்புணர்ச்சியால் கைது செய்ததை  தி.மு.க., உறுப்பினர் விநாயகமூர்த்தி அக்கட்சியிலிருந்து விலகுவதாக, முதல்வருக்கு தனது உறுப்பினர் அட்டையை அனுப்பியுள்ளார்.

ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பெற்று பணியும் வழங்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் தமிழக பால்வளத்துறை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் முன் ஜாமீன் கிடைக்காத நிலையில் தலைமறைவாகி இருந்த ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டார். இது பழி வாங்கும் நடவடிக்கை எனக்கூறி திமுக உறுப்பினர் ஒருவர்  ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். 

இதுகுறித்து மீனம்பட்டி விநாயகமூர்த்தி முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பிய மனுவில், ‘’தி.மு.க., வில் 15 ஆண்டுகளாக உறுப்பினராக உள்ளேன். எங்களது மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை சிறையில் வைக்க வேண்டும் என்ற உள்நோக்கில், சிறையில் அடைத்திருப்பது எங்கள் பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அவர் பல நல்ல காரியங்களை செய்துள்ளார். பட்டாசு தொழிலாளர்களுக்கு, தொழிலுக்கு உறுதுணையாக இருந்தார். அவரை கைது செய்தது மனதை வேதனைப்படுத்தி விட்டது. கட்சி நிர்வாகம், ஆட்சி நிர்வாகம் திருப்தி இல்லை என்பதால் தி.மு.க.,விருந்து விலகிக்கொள்கிறேன்’’என தெரிவித்துள்ளார்.

இது குறித்து விநாயக மூர்த்தி கூறுகையில், ’’எங்கள் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சிவகாசி தொகுதியின் எம்.எல்.ஏ-வாக 10 ஆண்டுகளாக பதவியில் வகித்துள்ளார். பட்டாசுத் தொழிலாளர்களின் நலனுக்காகவும், பாதுகாப்பான பட்டாசுத் தொழில் உற்பத்திக்கும் உறுதுணையாக இருந்துள்ளார். சிவகாசி அரசு மருத்துவமனையில் கூடுதலாக நவீன தீக்காய சிகிச்சைப் பிரிவு அமைத்துக் கொடுத்திருக்கிறார். அவர்மீது சுமத்தப்பட்டது பொய்யான குற்றச்சாட்டு என்பது தற்போதுதான் தெரியவருகிறது.

பண மோசடி செய்திருப்பதாக ராஜேந்திர பாலாஜிமீது சுமத்தப்பட்ட வழக்கில் புகார் அளித்துள்ள சாத்தூரைச் சேர்ந்த ரவீந்திரன் ’’தான் ராஜேந்திர பாலாஜியை நேரில் சந்திக்கவோ, பணம் கொடுக்கவோ செய்யவில்லை. அ.தி.மு.க நிர்வாகியான விஜய நல்லதம்பியைத்தான் நேரில் சந்தித்து வேலைக்காகப் பணம் கொடுத்தேன்” என உச்ச நீதிமன்றத்தில் தெளிவாக, அறிக்கையாகக் கொடுத்துள்ளார்.

இதுவரை விஜயநல்ல தம்பியை ஏன் போலீஸார் கைது செய்யவில்லை? ராஜேந்திர பாலாஜிமீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்பது போலீஸாருக்கே தெரியும். ராஜேந்திர பாலாஜி மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசக்கூடியவர்.

எட்டு தனிப்படைகள் அமைத்து, கொலைக் குற்றவாளியைப்போல, தேச பயங்கரவாதியைப்போலத் தேடி அவசரகதியில் கைதுசெய்து சிறையில் அடைக்கவேண்டிய அவசியமென்ன? ராஜேந்திர பாலாஜி கைது நடவடிக்கையில் அவசரம் காட்டியது ஏன் என உச்ச நீதிமன்ற நீதிபதிகளே தமிழக அரசை நோக்கிக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அரசியல் காழிப்புணர்சியால் தி.மு.க அரசின் உந்துதலால் ராஜேந்திர பாலாஜி கைதுசெய்யப்பட்டதாக எனக்குத் தோன்றுகிறது. 15 ஆண்டுகளாக தி.மு.க-வில் உறுப்பினராக இருக்கும் நான் எனது உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாகத் தீர்மானித்து, எனது ராஜினாமா கடிதத்துடன் உறுப்பினர் அட்டையையும் இணைத்து அறிவாலயத்துக்கு அனுப்பிவைத்துவிட்டேன்” எனத் தெரிவித்துள்ளார். இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு 4 வாரங்கள் நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

click me!