யாருடன் கூட்டணி வைத்தாலும் ஓகே.! பிரேமலதாவிற்கு அதிகாரம் - தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்

By Ajmal Khan  |  First Published Feb 7, 2024, 12:08 PM IST

இதுவரைக்கும் எந்த கட்சியுடனும் கூட்டணி குறித்து மறைமுகமாகவோ, அதிகாரப்பூர்வமாகவோ பேசவில்லை என  தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூட்டணி தொடர்பாக முடிவு எடுக்க பிரேமலதாவிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 
 


நாடாளுமன்ற தேர்தல் தேதி இந்த மாத இறுதியில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், திமுக தனது கூட்டணி கட்சியோடு முதல் கட்ட தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை முடித்துள்ளது. ஆனால் அதிமுக மற்றும் பாஜக இன்னும் கூட்டணி தொடர்பாக உறுதியான முடிவு எடுக்கப்படவில்லை. இந்த பரபரப்பான சூழ்நிலையில் தேமுதிகவிற்கு அதிமுக மற்றும் பாஜக அழைப்பு விடுத்துள்ளது. ஆனால் தேமுதிக இதுவரை கூட்டணியை உறுதிசெய்யவில்லை. இந்தநிலையில் தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கலாம் என்பது தொடர்பாக ஆலோசிக்க தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கூட்டணி தொடர்பாக இறுதி முடிவு எடுக்க பிரேமலதா விஜயகாந்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

தீர்மானம்: 1

Latest Videos

undefined

தமிழகத்தில் ஒரு மாற்றம் வேண்டும் அதன் மூலம் ஒரு நல்லாட்சியை தர வேண்டும் என்று உழைத்து தமிழக மக்களுக்காக தன்னை முழுவதும் அர்ப்பணித்து இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் என்றைக்கும் அனைத்து நெஞ்சத்தில் வாழ்கின்ற மாசில்லா மாணிக்கம் புரட்சிக் கலைஞர், தேமுதிக நிறுவனத்தலைவர், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர், பத்மபூஷன் மாண்புமிகு கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மறைவு வாழ்வில் ஈடு செய்ய முடியாதது. கேப்டன் அவர்களுக்கும், சமீபத்தில் மறைந்த கழகத்தினருக்கும் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தீர்மானம்: 2

மறைந்த உலகத் தமிழ் தலைவர் புரட்சிக் கலைஞர் கேப்டன் அவர்களுக்கு இந்தியாவின் உயரிய விருதான பத்மபூஷன் விருதை அறிவித்த பாரத பிரதமருக்கும்,  மத்திய அரசுக்கும் இந்த கூட்டம் நன்றி தெரிவித்துக்கொள்கிறது. அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்த தமிழக அரசுக்கும், கேப்டன் மீது அளவில்லா அன்பு வைத்திற்குக்கும் உலகம் முழுவதும் வாழும் ஈழத் தமிழர்களுக்கும், தமிழகத்தை தமிழர்களுக்கும், கேப்டனின் இறுதி ஊர்வலத்தில் வழிநெடுக்க மலர்தூவி இறுதி அஞ்சலி செலுத்தி பிரியா விடை கொடுத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என்றும் நெஞ்சம் மறவாத நன்றியை தேமுதிக தெரிவித்துக்கொள்கிறது.

தீர்மானம் : 3

ஜாதி, மத, பேதமின்றி எல்லா அரசியல் தலைவர்களோடு இணக்கமாக வாழ்ந்து மறைந்த கேப்டன் அவர்கள் மறைவிற்கு ஜாதி, மத, அரசியலுக்கு அப்பால் அனைத்து தரப்பினரும் ஒன்று சேர்ந்து தமிழகம் முழுவதும் அமைதிப் பேரணி மற்றும் புகழஞ்சலி செலுத்திய அனைவருக்கும் தேமுதிக நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.

அதிமுகவிற்காக பாஜகவின் கூட்டணி கதவுகள் திறந்துள்ளது.! விஜய் அரசியல் வருகையால் பாதிப்பா.? அமித்ஷா அதிரடி

தீர்மானம்: 4

மீலாத்துயரிலும், துக்கத்திலும் மனம் தளராமல் அவர் விட்டுச் சென்ற கொள்கையை அவர்தம் பாதையில் சென்று வெற்றியடைய அயராமல் உழைத்திடும் தேமுதிக பொதுச்செயலாளர் மக்கள் தலைவி திருமதி.அண்ணியாருடன் என்றென்றும் எதற்கும் அஞ்சாமல் துணை நின்று வெற்றி படைப்போம் என்று மாவட்ட கழக செயலாளர்கள், கழக நிர்வாகிகள் உள்ளிட்ட கழக தொண்டர்கள் அனைவரும் இக்கூட்டத்தில் உறுதி ஏற்போம் என்று தேமுதிக பறைசாற்றுகிறது.

 தீர்மானம்: 5

தேமுதிக தலைமைக் கழக வளாகத்தில் சந்தன பேழையில் உறங்கிடும் புரட்சிக் கலைஞர் கேப்டன் அவர்களின் உறைவிடத்தை கேப்டன் கோவிலாக மாற்றி தமிழக மக்களுக்கு அர்ப்பணிக்குமாறு கழக பொதுச்செயலாளரிடம் இந்த கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம்: 6

பத்மபூஷன் புரட்சிக் கலைஞர் கேப்டன் அவர்களுக்கு மாவட்டம் தோறும் சிலை நிறுவிட தலைமை கழகத்திடம் ஆலோசனை செய்து மாவட்ட கழகச் செயலாளர்கள் அந்தந்த மாவட்டங்களில் சிலை அமைக்க முடிவு எடுப்பதாக இந்த கூட்டத்தின் வாயிலாக தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

 தீர்மானம்: 7

தேர்தல் விதிமுறைகள் அமுலுக்கு வருவதற்கு முன் கேப்டன் புகழை எடுத்துரைக்கும் வகையில் அனைத்து மாவட்டத்திலும் கிராம சபை கூட்டங்கள், தெரு முனை பிரச்சாரங்கள், சிறிய அளவிலான கூட்டங்கள் மூலம் கேப்டன் அவர்களின் புகழ் மக்களுக்கு சென்றடையும் வகையில் கூட்டங்கள் நடத்திட வேண்டும். தமிழகம் முழுவதும் தேமுதிகவின் நான்கு மண்டலங்களில் கேப்டன் அவர்களின் நினைவேந்தல் புகழஞ்சலியை மாபெரும் பொதுக்கூட்டமாக நடத்திட தேமுதிக இக்கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம்: 8

தேமுதிக இதுவரைக்கும் எந்த கட்சியுடனும் கூட்டணி குறித்து மறைமுகமாகவோ, அதிகாரப்பூர்வமாகவோ பேசவில்லை. ஊடகங்களில் வரும் செய்திகள் யூகமாகவே கருதப்படுகிறது. மாவட்ட கழக செயலாளர்கள், கழக நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்டு கூட்டணி பேச குழு அமைத்திடவும், கூட்டணி குறித்து இறுதி முடிவெடுக்கும் முழு அதிகாரத்தை மரியாதைக்குரிய கழக பொதுச் செயலாளர் திருமதி.அண்ணியார் அவர்களுக்கு வழங்கி இந்த கூட்டம் தீர்மானம் நிறைவேற்றுகிறது. என தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்

Annamalai Padayatra : சென்னையில் ஜேபி நட்டா, அண்ணாமலை நடை பயணம்.. அனுமதி மறுத்த போலீஸ்- காரணம் என்ன.?

click me!