பலமணி நேரம் வெயிலில் கருகிய செய்தியாளர்கள்.. அலட்சியம் காட்டிய அதிகாரிகள். மரத்தடியில் ஒண்டிய அவலம்..

By Ezhilarasan BabuFirst Published Aug 14, 2021, 10:00 AM IST
Highlights

இது குறித்து அங்கிருந்த ஒளிப்பதிவாளர் கூறியதாவது:-  இப்போதெல்லாம் பத்திரிக்கையாளர்களுக்கு அரசு அதிகாரிகளிடத்தில் எந்த மரியாதையும் கிடையாது, செய்தியாளர்களை மிக அலட்சியமாக நடத்தும் போக்கை நிலவுகிறது. ஊடகவியலாளர்கள் மத்தியில் ஒற்றுமை இல்லாததே இதற்கு காரணம், அதுமட்டுமின்றி பத்திரிகையாளர்களையும் பிரித்தாளும் வேலையில் அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர்.

நேற்று தமிழக பட்ஜெட் தாக்கல் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் பல மணி நேரம் கலைவாணர் அரங்கத்திற்கு வெளியில் ஒதுங்க நிழல்கூட இன்றி வெயிலில் காத்திருந்த அவலம் ஏற்பட்டுள்ளது. தங்களை உள்ளே அனுமதிக்கும் படி கேட்டதற்கு, அனுமதி மறுத்ததுடன், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை அதிகாரிகள் மிக அலட்சியமாக பதில் அளித்ததாகவும் செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்று பத்திரிகை மற்றும் ஊடகத் துறை, அரசுக்கும் மக்களுக்கும் பாலமாக இருந்து ஜனநாயகத்தை நிலைநாட்டுவதில் முக்கிய பங்கு ஆற்றி வருகின்றனர் ஊடகவியலாளர்கள். மக்களின் குறைகள், கோரிக்கைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதும், அரசு எடுக்கும் மக்கள் நல திட்டங்களை மக்களுக்கு எடுத்துரைப்பதும், ஊடகத்தின் தலையாய பணியாக இருந்து வருகிறது. அதுமட்டுமின்றி எங்கெல்லாம் மக்கள் பாதிக்கப்படுகிறார்களோ, சமூக அவலங்கள் தலைதூக்குகிறதோ அங்கெல்லாம் முதல் ஆளாக களத்தில் நின்று,  நியாயம் கேட்பவர்களாக செய்தியாளர்கள் இருந்து வருகின்றனர். வெயில், மழை, புயல், பேரிடர் என  எதையும் பொருட்படுத்தாது நேரடியாக களத்திற்கு சென்று மக்களுக்கு செய்தியும், இது குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தும் உன்னத பணியில் தங்களை அர்ப்பணித்து வருகின்றனர். 

தமிழகத்தைப் பொருத்தவரையில் ஒரு காலத்தில்  பத்திரிக்கையாளர்கள் மிகுந்த கவுரவத்துடனும், மரியாதையுடனும் நடத்தப்பட்டனர். ஆனால் அது காலப்போக்கில், அந்த கவுரவமும், மரியாதையும் இந்த கார்ப்பரேட் அரசியல் யுகத்தில் மங்கிப்போய் விட்டது என்றே சொல்லலாம்.
ஆனால் என்றும் பத்திரிகையாளர்களின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ள தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கு தனி வாரியம் அமைக்கப்படும் என்றும் அவர்களின் உரிமைகளை நிலைநாட்டுவதில் அரசு உறுதியாக இருக்கிறது என்றும் சமீபத்தில் அறிவித்துள்ளார்.

இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் ஒட்டுமொத்த தமிழகமும் எதிர்ப்பார்த்து காத்திருந்த, தமிழக பட்ஜெட் தாக்கல் குறித்து, செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், நேற்று கலைவாணர் அரங்கம் முன் திரண்டிருந்தனர். கொரோனா தொற்று காரணமாக தலைமைச்செயலகத்தில் கூட்டம் நடத்துவதற்கு மாறாக கலைவாணர் அரங்கத்தில் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால், கலைவாணர் அரங்கத்தில் மூன்றாவது தளத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் தாக்கலானது. எனவே அதை செய்தி சேகரிக்க காலை 8 மணிக்கே செய்தியாளர்கள் அந்த வளாகத்திற்குள் சென்றுவிட்டனர். 

ஆனால் பட்ஜெட் கூட்டத்தொடர் 10 மணிக்கு தான் தொடங்கியது, பாதுகாப்பு காரணம் கருதி செய்தியாளர்கள் முன்கூட்டியே உள்ளே அனுமதிக்கப்பட்டு விட்டனர். ஆனால் அங்கு அவர்களுக்கு உரிய நிழற்குடையோ,  குடிநீர் வசதியோ எதுவுமே செய்து தரப்படவில்லைகலைவாணர் அரங்கத்தில் மூன்றாவது  தளத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது, ஆனால் அதற்கு கீழ் உள்ள இரண்டு தளங்கள் காலியாகவே இருந்தது. அதிகாரிகள் நினைத்திருந்தால் வெளியில் காத்திருந்த செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்களை உள்ளே அனுமதித்திருக்க முடியும், ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. காலை 10 மணிக்கு தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடர் பிற்பகல் 2 மணி வரை நீடித்தது, அதுவரையில் செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் ஒதுங்க நிழல் இன்றி  பல மணிநேரம் வெயிலில் காத்திருந்தனர்.அங்கு ஒரே ஒரு (சார்மினார்) பந்தல் மட்டும் போடப்பட்டிருந்தது, அதுவும் அங்கு பணியில் இருந்த காவலர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் செய்தியாளர்கள் கொளுத்தும் வெய்யிலில் நிற்கவைக்கப்பட்டனர். 

இதுகுறித்து அங்கிருந்த செய்தியாளர்கள், மக்கள் தொடர்பு அதிகாரிகளிடத்தில் கேட்டதற்கு, இந்த அவசரத்தில் எதுவும் செய்ய முடியாது, அதெல்லாம் நீங்க முன்னாடியே கேட்டு இருக்கனும், என்று  தாங்கள் செய்ய வேண்டிய கடமையாமல் செய்யாமல், அவர்கள் செய்தியாளர்களை குற்றவாளிகளைப் போல கேள்வி கேட்டமு செய்தியாளர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று செய்தியாளர்களுக்கு நேர்ந்த அவலநிலை குறித்து சில வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது, இது முதல்வரின் கவனத்திற்கு சென்றால் தங்களின் வேலைக்கு வேட்டு வந்துவிடுமோ என அலறிய அதிகாரிகள், உரிய செய்தியாளர்களை தொடர்பு கொண்டு தங்கள் செயலுக்கு வருந்துவதாகவும், இதை பெரிது படுத்தவேண்டாம் என்றும். அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். செப்டம்பர் 21ஆம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில், கலைவாணர் அரங்கத்திற்கு செய்தி சேகரிக்கச் செல்ல உள்ள ஊடகவியலாளர்களுக்கு அவரசர கதியில் பந்தல் அமைக்கும் பணியில் மக்கள் தொடர்பு அதிகாரிகள் வேகமாக ஈடுபட்டுள்ளனர். இது குறித்து அங்கிருந்த ஒளிப்பதிவாளர் கூறியதாவது:-  இப்போதெல்லாம் பத்திரிக்கையாளர்களுக்கு அரசு அதிகாரிகளிடத்தில் எந்த மரியாதையும் கிடையாது, செய்தியாளர்களை மிக அலட்சியமாக நடத்தும் போக்கை நிலவுகிறது. ஊடகவியலாளர்கள் மத்தியில் ஒற்றுமை இல்லாததே இதற்கு காரணம், அதுமட்டுமின்றி பத்திரிகையாளர்களையும் பிரித்தாளும் வேலையில் அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர். 

ஒரு சில பிரபலமான பெரிய தொலைக்காட்சிகளை மட்டுமே முக்கியமான நிகழ்ச்சிகளில் அனுமதிக்கின்றனர். சிறிய தொலைக்காட்சிகளின் பணியாற்றுகின்ற ஊழியர்களுக்கும், செய்தியாளர்களுக்கும் எந்த மரியாதையும் கிடையாது. இதுகுறித்து பலமுறை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றும் அதே நிலைதான் தொடர்கிறது. இந்த பட்ஜெட்  கூட்டத்தொடர் தலைமைச் செயலகத்தில் நடந்திருந்தால் அங்கு பத்திரிகையாளர்களுக்கு என்று தனி அறை இருக்கிறது, அதை பத்திரிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்வர், ஆனால் கலைவாணர் அரங்கத்தில் அதுபோன்ற எந்த ஏற்பாடும் இல்லை, எந்த அறையும் இல்லை. இதனால் பத்திரிக்கையாளர்கள் குடிநீர் கழிப்பறை போன்ற எந்த அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கின்றனர்.

இதேபோல குடியரசு தலைவர் வருகையின் போதும் பத்திரிக்கையாளர்கள் பாதுகாப்பு காரணம் காட்டி மோசமாக நடத்தப்பட்டனர், குடியரசு தலைவர் வருவதற்கு பல மணிநேரம் முன்கூட்டியே வரவழைக்கப்பட்டு பத்திரிக்கையாளர்கள் ஒரே அறையில் குடிக்க தண்ணீர் கூட இன்றி அடைத்து வைக்கப்பட்டனர். குடிக்க தண்ணீர் கேட்ட பத்திரிக்கையாளர்களை, அதெல்லாம் இப்போ தரமுடியாது, செத்தால் சாவுங்க என ஒரு அதிகாரி கூறியது, பத்திரிக்கையாளர்கள் மத்தியில் கடுமையான வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அரசுக்கும் மக்களுக்கும் பாலமாக இருந்து செயல்படும், ஜனநாயகத்தின் நான்காவது தூண் என வர்ணிக்கப்படும் பத்திரிக்கையாளர்களுக்கு உரிய மரியாதையும், கவுரவத்தையும் தமிழக முதல்வர் தலையிட்டு உறுதி செய்ய வேண்டும் என செய்தியாளர் மத்தியில் கோரிக்கை எழுகிறது. 

இந்நிலையில், இது தொடர்பான செய்திகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவியதை தொடர்ந்து. தற்போது துரித கதியில் மக்கள் தொடர்பு துறை அதிகாரிகள், செய்தியாளர்களுக்கு கலைவாணர் அரங்கத்தில் நுழைவாயிலில் பந்தல் அமைத்து கொடுத்துள்ளனர். தற்போது அதற்கான புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.

செய்தியாளர்கள் வைத்த கோரிக்கைக்கு செவிமடித்து, உடனே நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு செய்தியாளர் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

click me!