
தமிழக ஆளுநருக்கும் மாநில முதல்வர் ஸ்டாலினுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பனிப்போரில் ஆளுநர் மாற்றப்படுவாரா இல்லையா என்பது 5 மாநில தேர்தல் முடிவை பொறுத்தே அமையும் என மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் கூறியுள்ளார்.
ஒருவேளை உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக தோல்வியைத் தழுவினால் பாஜக தனது எல்லா முடிவுகளையும் மறுபரிசீலனை செய்யும், அப்போது எதிர்க்கட்சி எம்பிக்களின் ஆதரவு அவர்களுக்கு தேவைப்படும், அந்த சூழல் ஏற்பட்டால் அதற்கு இடையூறாக ஆளாநர் இருக்கிறார் என்றால் ஆளுநரையே மாற்றி விடுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக நெருங்கிய பத்திரிக்கையாளர்கள் மற்றும் பல்வேறு உள்துறை உளவு அமைப்புகள் கொடுக்கும் அறிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளும் ஆளுநர் மாற்றுவது தொடர்பான முடிவுகள் அதன் அடிப்படையில் அமையும் என்றும் அவர் கூறியுள்ளார். திமுக கூட்டணி கட்சிகள் எச்சரித்ததை போலவே ஆளுநருக்கும்- தமிழக முதல்வருக்கும் இடையேயான மோதல் வலுத்துள்ளது.
தமிழக ஆளுநராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான ஆர்.என் ரவி நியமிக்கப்பட்டபோதே அவரின் நியமனத்திற்கு திமுகவின் கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்டவை கடும் எதிர்ப்பு தெரிவித்தன. காவல்துறை பின்புலம் கொண்ட ஒருவரை தமிழக ஆளுநராக நியமிப்பதற்கு காரணம் என்ன என்றும், முதல்வர் ஸ்டாலினுக்கு இடையூறு செய்வதற்கே ஆர்.என் ரவியை பாஜக நியமிக்கிறது என்றும் கூட்டணி கட்சிகள் குற்றம் சாட்டின. ஆர்.என் ரவியை உடனே திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். ஆனால் இந்த விவகாரத்தில் எந்த எதிர்வினையும் ஆற்றாது தமிழக முதல்வர் ஸ்டாலின், பாஜகவை கொள்கை ரீதியாக எதிர்த்தாலும் ஆளுநர் என்பவர் அரசியல் அமைப்பு சட்டத்தின் படி நியமிக்கப்பட்டவர் என்பதால் தமிழக முதல்வரே நேரில் சென்று ஆளுநரை வரவேற்றார்.
அதைத்தொடர்ந்து ஆளுநருக்கும், முதல்வருக்கும் இடையேயான உறவு சுமுகமாக இருந்துவந்தது. பாஜகவும் திமுக கூட்டணி கட்சிகளும் ஆச்சரியப்படும் அளவிற்கு ஆளுநர் தமிழக முதல்வரை மனம் திறந்து பாராட்டி வந்தார். தமிழக சட்டமன்றத்தில் அவர் நிகழ்த்திய உரையும் தமிழக அரசின் கொள்கை கோட்பாடுகளை பறைசாற்றுவதாகவே இருந்தது. முதல்வர் ஸ்டாலினுடன் மோதுவதற்காகவே தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்பட்டவர் ஆளுநர் ரவி என விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில் அவரின் நடவடிக்கைகள் தமிழக அரசுக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் அனுசரணையாகவே இருந்தது. அது பலரையும் ஆச்சரியப்பட வைத்தது. ஆளுநரின் உரையை பாஜக, பாமக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் கடுமையாக விமர்சித்தன. ஆளுநர் ஸ்டாலின் பக்கம் சாய்ந்து விட்டார் என்று பாஜகவும், அதிமுகவுக்கு சந்தேகப்படும் அளவிற்கு அவரின் நடவடிக்கைகள் இருந்து வந்தது
ஆனால் ஆளுநர் விவகாரத்தில் ஆரம்பம் முதலிருந்தே பட்டும்படாமலும் இருந்து வந்த முதலமைச்சர் ஸ்டாலின், நீட் விவகாரத்தில் ஆளுநர் பாராமுகமாக இருந்து வருகிறார் என்பதையும், தமிழக அரசின் கொள்கைகளுக்கு எதிராக செயல்படுகிறார் என்பதையும் மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டுவதில் உறுதியாகவே இருந்து வருகிறார்.தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஆளாநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் காட்டமாக அறிக்கைவிட்டு தனது நிலைபாட்டை உறுதி செய்தார் ஸ்டாலின். கடந்த சில நாட்களுக்கு முன்னர் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த தமிழக எம்பிக்கள் குழு நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டுமென கோரிக்கை முன்வைத்தது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டி.ஆர் பாலு ஆளுநர் ஆர்.என் ரவியை கடுமையாக விமர்சித்ததுடன், ஆளுநர் ஆர்.என் ரவி தமிழகத்திற்கு தேவையில்லை என்றும், அவர் பதவி விலக வேண்டும் என்றும் கூறினார்.
அதன் தொடர்ச்சியாக சுதந்திர தின விழாவில் உரையாற்றிய ஆளுநர், பிறமாநில மாணவர்களைப் போல தமிழ்நாட்டு மாணவர்களும் பிற மொழியை பயில வேண்டும், நீட்டுக்கு முந்தைய காலத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை காட்டிலும் நீட் தேர்வுக்கு பின்னர் அவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது என்ற தொனியில் பேசினார். அவரின் இந்த பேச்சை அமைச்சர்கள் கடுமையாக விமர்சித்தனர். இதன் தொடர்ச்சியாகத்தான் ஆளுநரை கண்டிக்கும் வகையில் கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா என்ற தலைப்பில் முரசொலி கட்டுரை வெளியிட்டுள்ளது. இதேபோல் காந்தி நினைவு தினத்தன்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மக்களின் நலனே தேசத்தின் நலன் என உழைத்த உத்தமர் காந்தியடிகளின் நினைவு நாளில் அன்பும், சகோதரத்துவமும் கொண்டு ஒற்றுமை பேணிட உறுதி ஏற்று கோட்சேவின் வாரிசுகளுக்கும் அவர்களது தீய எண்ணங்களுக்கும் நம் இந்திய மண்ணில் இடமில்லை என சூளுரைப்போம் என பதிவிட்டிருந்தார். அவரின் இந்த பதிவு பாஜகவுக்கு எதிரான கருத்தாகவே பார்க்கப்படுகிறது.
இப்படி ஆளுநரின் கருத்துக்கு ஆளும் திமுக தரப்பில் இருந்து வெளிவரும் அறிக்கைகளும், ஆளுநருக்கு எதிராகவும் மத்திய அரசுக்கு எதிராகவும் முதல்வரின் பதிவுகளும், ஆளுநருக்கும்- ஸ்டாலினுக்கும் இடையே மோதல் வலுத்துவிட்டது என்பதை காட்டுவதாக உள்ளது. இந்நிலையில்தான் இந்த மோதல் போக்கு குறித்து தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவரான தராசு ஷ்யாம் பேட்டி ஒன்று கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- நாம் எதற்காக நீட்டு சட்ட மசோதா நிறைவேற்றினோமோ அதற்கு எதிராகவே ஆளுநரின் பேச்சுக்கள் இருந்து வருகிறது. அதேபோல் தமிழகத்தில் இரு மொழிக் கொள்கைகளுக்கு எதிராகவும் ஆளுநரின் பேச்சுக்களில் இருந்து வருகிறது. அதனால்தான் திமுக ஆளுநருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் " கொக்கு என்று நினைத்தாயோ கொங்கணவா " என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டுள்ளது. பொதுவாக ஆளுநர் முதல்வர் உறவு சரியாக இருக்க வேண்டும், ஆனால் இப்போது அப்படி இல்லை. அதனால் இப்படி முரசொலியில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஆளுநர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளது. கட்டாயம் இந்த கட்டிரையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து டெல்லிக்கு அனுப்பியிருப்பார்கள். நீட் விவகாரத்தில் வழக்கமாக ஜெயலலிதா ஆளுநர்களுடன் நேரடியாகவே மோதுவார்.
ஆனால் திமுக அப்படி செய்யாது, எப்போதும் அரசியல் சட்டத்திற்கு உட்பட்டுதான் திமுகவினுடைய அணுகுமுறைகள் இருக்கும். ஆனால் இப்போதைய ஆளுநர் பிரச்சினைக்கு உரியவராக இருக்கிறார். ஆளுநர் மாளிகை என்பது ஒரு எதிர்க்கட்சியின் கூடாரமாக மாறி வருகிறது. எப்போதும் ஆளுநர் முதல்வர் இடையே ஏற்படும் மோதலில் முதல்வர் வெற்றி பெறுவதுதான் தமிழ்நாட்டின் வழக்கமாக இருந்து வருகிறது.
அந்தவகையில் ஆளுநர் ஆர்.என் ரவி மாற்றப்படுவாரா? இல்லையா? என்பது 5 மாநில தேர்தல் முடிவுகளை பொறுத்தே இருக்கும், ஒருவேளை உத்தரபிரதேச மாநில தேர்தலில் பாஜக தோல்வி அடைந்துவிட்டால், அப்போது எதிர்க்கட்சிகளின் ஆதரவு அக்கட்சிக்கு தேவைப்படும். அந்த நிலையில் ஆளுநர் அதற்கு தடையாக இருக்கிறார் என்றால் ஆளுநரை கூட மாற்ற பாஜக தயங்காது. ஏனென்றால் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக அரசின் பதவிக்காலம் 2026 வரை உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் 2024 நடைபெற உள்ளது. அதேபோல் உள்துறையின் கீழ் உள்ள உளவு அமைப்புகள், மூத்த பத்திரிகையாளர்கள் கொடுக்கிற ரிப்போர்ட்டின் அடிப்படையில் அவர்கள் அந்த முடிவுகளை எடுப்பார்கள். மொத்தத்தில் உத்தரப்பிரதேச மாநிலத்தின் தேர்தல் முடிவு வந்த பின்னரை ஆளுநரில் நிலைமை என்ன என்பதை கூற முடியும். இவ்வாறு ஷியாம் தெரிவித்துள்ளார்.