பழைய குற்றத்தை மீண்டும் செய்யும் தே.மு.தி.க! ‘பிரேமலதாவை’ காய்ச்சிக் கொட்டும் தி.மு.க! வாயிருந்தும் பேசாக் குழந்தையாய் விஜயகாந்த்!

By Vishnu PriyaFirst Published Mar 3, 2019, 1:24 PM IST
Highlights

தமிழக அரசியலை கவனித்து வருபவர்கள் நிச்சயம் அதை மறந்திருக்க மாட்டார்கள்! கடந்த 2016 சட்டமன்ற தேர்தலின் போது தே.மு.தி.க.வுடன் கூட்டணிக்காக மிக மிக இறங்கி வந்தார் கருணாநிதி. பல நாள் காத்திருந்தும், பல நிபந்தனைகளுக்கு சம்மதித்தும் கூட கடைசியில் மக்கள் நல கூட்டணி!யில் இணைந்தார். 
 

தமிழக அரசியலை கவனித்து வருபவர்கள் நிச்சயம் அதை மறந்திருக்க மாட்டார்கள்! கடந்த 2016 சட்டமன்ற தேர்தலின் போது தே.மு.தி.க.வுடன் கூட்டணிக்காக மிக மிக இறங்கி வந்தார் கருணாநிதி. பல நாள் காத்திருந்தும், பல நிபந்தனைகளுக்கு சம்மதித்தும் கூட கடைசியில் மக்கள் நல கூட்டணி!யில் இணைந்தார். 

இதில் கடுப்பாகி, தே.மு.தி.க.வின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த வி.சி.சந்திரகுமார் உள்ளிட்ட சில முக்கியஸ்தர்கள் கட்சியை விட்டு வெளியேறியதோடு, அதை உடைக்கவும் செய்தனர். அப்போது ’கேப்டனுக்கு தி.மு.க. கூட்டணியில் சேர்றதுதான் இஷ்டம். ஆனா அவரு மனைவி பிரேமலதாவுக்குதான் அது பிடிக்கலை. அவங்கதான் இந்த நல்ல வாய்ப்பைக் கெடுத்துட்டாங்க. பிரேமாவை மீறி தலைவராலும் எதையும் பண்ண முடியலை. காரணம், வீட்டுல எதையும் தடபுடலா பேசி, செய்யுற அளவுக்கு கேப்டனோட உடல் நிலை இல்லை.’ என்றார்கள். 

அந்த தேர்தலில் மிக மிக மோசமான தோல்வியை சந்தித்து, வாஷ் அவுட் ஆனது தே.மு.தி.க. தலைமையிலான மக்கள் நல கூட்டணி. ‘முடிந்தது கேப்டனின் ராஜ்ஜியம்’ என்று கடும் விமர்சனத்துக்கு ஆளானார்கள். 

இந்நிலையில் இப்போது நாடாளுமன்ற தேர்தலை வைத்து மீண்டும் அரசியலின் உச்சாணிக் கொம்பில் ஏற முயற்சிக்கிறது தே.மு.தி.க. அக்கட்சிக்கு ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் இருக்கும் சில ஆயிரம் வாக்குகள் நமது வெற்றிக்கு சப்போர்ட் பண்ணும்! என எண்ணுவதால் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. இரண்டுமே மிகவும் பிரயாசப்பட்டன கூட்டணிக்கு. இதில் ஸ்டாலின் விஜயகாந்தை அவரது வீட்டுக்கே சென்று சந்திக்குமளவுக்கு இறங்கினார். ஆனாலும் கூட்டணி உடன்பாடு ஏற்படவில்லை. 

இந்நிலையில் அ.தி.மு.க.வுடன் கூட்டணிக்கு தே.மு.தி.க. அதிக நிபந்தனைகள் வைப்பதால் ’வந்தால் சந்தோஷம், வராட்டி கவலையில்லை.’ என்று ஒரேபோடாக போட்டார் அமைச்சர் ஜெயக்குமார். அதன்பிறகு பி.ஜே.பி. தலையிட்டு, அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வை வலுக்கட்டாயமாக கோர்த்துவிட்டுக் கொண்டிருக்கிறது. எந்த சூழ்நிலையிலும் கூட்டணி அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளிவரலாம்! எனும் நிலையில், கூட்டணியில் தங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டிய இடங்கள், ராஜ்யசபா சீட் ஆகியவற்றின் எண்ணிக்கையில் துவங்கி பல விஷயங்களில் பிரேமலதா போடும் கண்டிஷன்கள் அ.தி.மு.க.வை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிக் கொண்டே போகிறதாம். 

பிரேமலதாவின் போக்கினால்தான் கூட்டணி உடன்பாடுக்கு இவ்வளவு காலதாமதமாகிறது, எங்களின் பொறுமையை மிகவும் சோதிக்கிறார், எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை உண்டு, விஜயகாந்தின் முகத்துக்குதான் ஓட்டுக்கள், ஆனால் அது புரியாமல் என்னமோ விஜயகாந்தை உருவாக்கியதே தான் தான் என்பது போல் பிஹேவ் பண்ணுகிறார் பிரேமா! என்று வெளிப்படையாகவே  ஆத்திரப்பட துவங்கியுள்ளது அ.தி.மு.க. வட்டாரம். 

இதை எடுத்து வைத்துக் கொண்டு பேசும் அரசியல் விமர்சகர்கள்...”கடந்த 2016 தேர்தல் நேரத்தில் செய்த அதே குற்றத்தைத்தான் இப்போதும் செய்கிறது தே.மு.தி.க. பேச்சுவார்த்தை, பேச்சுவார்த்தை என்று இவர்கள் இழுத்துக் கொண்டே போவதை பார்க்கும் பொதுமக்களும், அக்கட்சியின் தொண்டர்களும் ‘பேரம்! பேரம்!’ என்று அதற்கு இன்னொரு அர்த்தம் கற்பித்து, தே.மு.தி.க. மீதான தங்களின் அனுதாபத்தை மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். 

இந்த முறையும் தாங்கள் இவ்வளவு இறங்கி வந்தும் பிரேமலதா தலைமையிலான தே.மு.தி.க. தங்களை அலட்சியம் செய்துவிட்டதால் ‘அந்தம்மா கேட்ட அநியாய ஆதாயங்களுக்கு தளபதி ஒத்துக்கலை. அதான் கூட்டணி ஏற்படலை. பேராசை பிரேமலதா!’ அப்படின்னு தி.மு.க. திட்டுவதையும் கவனிக்கணும். 

தன்னை வைத்துக் கொண்டு தன் கட்சியினுள் நடக்கும் இந்த அநியாயங்களை கண்ணால் கண்டும் கூட அதை முழுமையாக புரிந்து கொள்ள முடியாமலும், அது குறித்து உத்தரவு போட முடியாமலும், வாயிருந்தும் பேச இயலா குழந்தை போல் விழிபிதுங்கி அமர்ந்திருக்கிறார் விஜயகாந்த்! பாவம்.” என்கிறார்கள்.

click me!