Mark My Words | #FarmLaws வாபஸ் குறித்து அன்றே அடித்துச் சொன்ன ராகுல்காந்தி..! வைரல் வீடியோ உள்ளே..!

By manimegalai aFirst Published Nov 19, 2021, 11:38 AM IST
Highlights

விவசாயிகளின் சத்தியாக்கிரக போராட்டத்தால், நாட்டின் ஆணவம் தலை குனிந்தது. அநீதிக்கு எதிரான இந்த வெற்றிக்கு வாழ்த்துக்கள் என்றும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

விவசாயிகளின் சத்தியாக்கிரக போராட்டத்தால், நாட்டின் ஆணவம் தலை குனிந்தது. அநீதிக்கு எதிரான இந்த வெற்றிக்கு வாழ்த்துக்கள் என்றும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்த மூன்று புதிய வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று காலையில் நாட்டு மக்களிடம் அறிவித்தார். ஓராண்டாக போராடி வரும் விவசாயிகள் கோரிக்கையை முதல் முறையாக ஏற்ற பிரதமரின் அறிவிப்புக்கு பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். பிரதமரின் அறிவிப்பை வரவேற்கும் அரசியல் கட்சி தலைவர்கள், அமைப்புகள், மோடி அரசினை குறை கூறாமலும் இல்லை. பஞ்சாப், உத்தரப்பிரதேச மாநில சட்டமன்ற தேர்தல்கள் அடுத்த ஆண்டு நடைபெறுவதை மனதில் வைத்தே பிரதமர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக எதிர்க் கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் தொடங்கியதில் இருந்தே விவசாயிகளுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்து வருகிறது. வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் அதிகளவில் பஞ்சாப் மாநில விவசாயிகளே பங்கேற்றனர். பஞ்சாப்பில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடப்பதால் விவசாயிகள் போராட்டத்திற்கு தொடக்கம் முதலே மாநில அரசு ஆதரவு அளித்தது. விவசாயிகளை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயத்திற்காக தூண்டி விடுவதாக பாஜக புகார் கூறினாலும் காங்கிரஸ் தமது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கவில்லை.

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்திய அனைத்து போராட்டங்களுக்கும் காங்கிரஸ் கட்சி ஆதரவளித்தது. போராட்டக் களங்களிலும் காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்றனர். பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தனியாகவும், கூட்டணி கட்சிகள் உடன் இணைந்து பலகட்ட போராட்டங்களை முன்னெடுத்தது. புதிய சட்டங்கள் வாபஸ் பெறப்படும் வரை விவசாயிகளுக்காக போராடுவோம் என்று காங்கிரஸ் கட்சியினர் கூறி வந்தனர். பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற டிராக்டர் பேரணியில் ராகுல் காந்தி நேரடியாக பங்கேற்று விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தார். மேலும் விவசாயிகள் போராட்டக் களத்தில் சோர்வடையும் போதெல்லாம் அவர்களுக்கு ஆதரவாக ராகுல் காந்தி கருத்துகளை கூறிவந்தார்.

இந்தநிலையில் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளது குறித்து ராகுல் காந்தி டிவிட்டரில் தமது கருத்தை பதிவிட்டுள்ளார். அதில், விவசாயிகளின் சத்தியாக்கிரக போராட்டத்தால், நாட்டின் ஆணவம் தலை குனிந்தது. அநீதிக்கு எதிரான இந்த வெற்றிக்கு வாழ்த்துக்கள். ஜெய்கிந்த் என்று ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார். அத்துடன் ராகுல் காந்தி தாம் பேசிய பழைய வீடியோவின் டுவிட்டர் பதிவையும் இணைத்துள்ளார்.

 

 

கடந்த ஜனவரி மாதம் தமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தலின் போது திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக ராகுல் காந்தி சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு நிச்சயமாக திரும்பப்பெறும். எனது வார்த்தையை குறித்து வைத்துக் கொள்ளுங்கள் இது நிச்சயம் நடந்தே தீரும் என்று ராகுல் காந்தி கூறியிருந்தார்.

 

देश के अन्नदाता ने सत्याग्रह से अहंकार का सर झुका दिया।
अन्याय के खिलाफ़ ये जीत मुबारक हो!

जय हिंद, जय हिंद का किसान! https://t.co/enrWm6f3Sq

— Rahul Gandhi (@RahulGandhi)

ராகுல் காந்தி கூறியதைப் போலவே தற்போது மோடி அரசு வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றுள்ளது. அந்த வீடியோ பதிவை தமது வாழ்த்துச் செய்தியில் ராகுல் காந்தி இணைத்துள்ளார். இதையடுத்து காங்கிரஸ் கட்சி தொண்டர்கள், தலைவர்கள் மற்றும் நடுநிலையாளர்களும் ராகுல் காந்தியின் பழைய வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

 

click me!