நெருங்கும் பொதுக்குழு கிளைமாக்ஸ்.. அதிமுகவிலிருந்து ஓபிஎஸ்ஸுக்கு கல்தா.? இபிஎஸ் தரப்பின் புது ஸ்கெட்ச்.!

By Asianet TamilFirst Published Jul 3, 2022, 9:51 AM IST
Highlights

அதிமுக பொதுக்குழுவில் ஓ. பன்னீர்செல்வத்தை கட்சியை விட்டு நீக்குவதற்கான ஆலோசனைகளில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அதிமுகவில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஒற்றைத் தலைமை விவகாரம் எழுந்தது. அன்று முதல் அந்த விவகாரம் அதிமுகவில் கனலாக கனன்றுகொண்டிருக்கிறது. ஒற்றைத் தலைமையாக இபிஎஸ்ஸுக்கு ஆதர்வாக அதிமுகவில் பெரும்பாலோனர் அணி திரண்ட நிலையில், அதற்கு முட்டுக்கட்டை போட்டார் ஓபிஎஸ். இந்த விவகாரத்துக்கு ஜூன் 23 அன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவிலேயே முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 23 தீர்மானங்களைத் தாண்டி வேறு எந்தத் தீர்மானமும் நிறைவேற்றக் கூடாது என்று நீதிமன்றத்தில் ஓபிஎஸ் பெற்ற உத்தரவால் ஒற்றைத் தலைமை விவகாரம் அதிமுகவில் இன்னும் பேசுபொருளாகவே இருக்கிறது..

ஜூன் 23 அன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டன. அதே வேளையில் கே.பி. முனுசாமி, சி.வி. சண்முகம் ஆகியோர் கோரிக்கையை ஏற்று ஜூலை 11 அன்று மீண்டும் பொதுக்குழு நடைபெறும் என்று அக்கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவித்தார். ஆனால், இந்தப் பொதுக்குழு சட்ட விரோதம் என்று கூறி தேர்தல் ஆணையத்துக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியிருக்கிறார். இபிஎஸ் தரப்புக்கு எதிராக நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு ஒன்றையும் ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்துள்ளது. மேலும் ஒபிஎஸ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை கோரி, உச்ச நீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பு மனு தாக்கல் செய்தது. அந்த வழக்கில் தங்கள் கருத்தைக் கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என ஓபிஎஸ் தரப்பு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

இதையும் படிங்க: ஜூலை 11 அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்க ஓபிஎஸ் அழைக்கப்படுவாரா.? சஸ்பென்ஸ் வைத்து பேசும் ஜெயக்குமார்.!

ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ்ஸும் இபிஎஸ்ஸும் நீயா, நானா என்ற பாணியில் மோதலில் ஈடுபட்டுள்ளனர். இபிஎஸ் ஒற்றைத் தலைமையாக உருவெடுத்துவிடக் கூடாது என்பதற்காக சகல அஸ்திரங்களையும் ஓபிஎஸ் வீசி வருவதால், அவர் மீது இபிஎஸ் தரப்பு கடுங்கோபத்தில் உள்ளது. ஓபிஎஸ்ஸின் முட்டுக்கட்டைகளை உடைத்தெறியும் வகையில் வழக்கறிஞர் அணி மூலம் இபிஎஸ் தரப்பு பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. ஏற்கெனவே தலைமைக் கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், அதிமுக மா.செ.க்கள், எம்.எல்.ஏ.க்கள் என பெரும்பாலோனர் இபிஎஸ் பக்கம்தான் இருக்கின்றனர். இவ்வளவு ஆதரவு இருந்தாலும், ஓபிஎஸ்ஸின் சட்ட ரீதியான நெருக்கடிகள் அந்தத் தரப்பை இன்னும் நெருக்கடிக்குள்ளாக்கி வருகிறது.

எனவே, ஒற்றைத் தலைமைக்கு முட்டுக்கட்டை, இபிஎஸ்ஸுக்குக் குடைச்சலாக மாறிவிட்ட ஓபிஎஸ்ஸை இனியும் கட்சியில் வைத்திருக்க வேண்டுமா என்ற கேள்வியை அதிமுக இரண்டாம் கட்டத் தலைவர்கள் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். அதன் ஒரு பகுதியாகத்தான் நேற்றைய தினம் செய்தியாளர்கள் சந்திப்பில் ஓபிஎஸ் மீது ஜெயக்குமார் பல குற்றச்சாட்டுகளை சுமத்தி பேசினார். கட்சி செயல்பாட்டை முடக்கி வைத்திருக்கிறீர்கள் என்று ஓபிஎஸ் எழுதிய கடிதத்துக்குப் பதில் கடித்தத்தில் இபிஎஸ் குறிப்பிட்டு குற்றம் சாட்டினார். ஓபிஎஸ் நீர்த்துப் போய்விட்டார் என்று கே.பி. முனுசாமியும் தன் பங்குக்குக் கொளுத்திப் போட்டார். மேலும் திமுகவுடன் நெருக்கமாக இருப்பதாகவும் முன்பு அக்கட்சித் தலைவர்களைப் புகழ்ந்து பேசியதை எல்லாம் எடுத்து ‘ஓபிஎஸ் துரோகி’ என்ற பட்டத்தையும் இபிஎஸ் தரப்பு வழங்கி, அவருக்கு எதிரான யுத்தத்தை தீவிரப்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஓபிஎஸ் செய்த தவறு இதுதான்..உண்மையை போட்டு உடைத்த எடப்பாடியார் - என்ன சொன்னார் தெரியுமா?

இபிஎஸ் தரப்பு ஓபிஎஸ்ஸுக்கு எதிராக அதிரடியைத் தொடங்கியிருக்கும் நிலையில், ஓபிஎஸ்ஸை கட்சியை விட்டே நீக்கும் வகையில் இபிஎஸ் தரப்பில் ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னை கிரீன்வேய்ஸ் சாலையில் உள்ள இபிஎஸ் வீட்டில் முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் இதுதொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே ஜூலை 11 அன்று நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பும் பணிகள் தொடங்கியுள்ளன. இந்தக் கடிதத்தில் தலைமை நிலைய செயலாளர் என்று இபிஎஸ்தான் கையெழுத்திட்டுள்ளார்.

இந்தப் பொதுக்குழுவில் பங்கேற்க ஓபிஎஸ்ஸுக்கு அழைப்பு அனுப்புவது பற்றி இபிஎஸ் தரப்பு இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை. ஆக, அதிமுகவிலிருந்து ஓபிஎஸ்ஸை ஓரங்கட்டும் அளவுக்கு இபிஎஸ் தரப்பு ஸ்கெட்ச்சுகளைப் பலமாக போட்டு வைத்திருக்கிறது. அதிமுகவில் அடுத்தது என்ன என்பதற்கான கிளைமாக்ஸ் நாளாக ஜூலை 11 குறிக்கப்பட்டிருக்கிறது. அன்று நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ்ஸின் கட்சி பொறுப்புகள் மட்டும் பறிக்கப்படுமா அல்லது கட்சியிலிருந்தே அவர் ஓரங்கட்டப்படுவாரா போன்ற கேள்விகளுக்கு விடை கிடைத்துவிடும். 

இதையும் படிங்க: திமுகவுக்கே சமூக நீதி பாடமா.? எடப்பாடியையும் அதிமுக உட்கட்சி பிரச்சனையையும் கொத்து பரோட்டா போட்ட டி.ஆர்.பாலு!

click me!