ரெம்டெசிவிர் மருந்து அனைத்துதரப்பு மக்களுக்கும் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். தி.வேல்முருகன் வேண்டுகோள்.

By Ezhilarasan BabuFirst Published Apr 30, 2021, 4:33 PM IST
Highlights

அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்கு இந்த மருந்து இலவசமாக செலுத்தப்பட்டு வரும் நிலையில்,  தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெறுபவர்களுக்கு இந்த மருந்து  கிடைப்பதில்லை என்பது வேதனை அளிக்கிறது.

ரெம்டெசிவிர் மருந்து அனைத்து தரப்பு மக்களுக்கும் எளிதாகக் கிடைக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து அக்கட்சி தலைவர் தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்:  

நாட்டு மக்கள் ஒவ்வொரு வரும் கொரோனா பேரிடர் காலத்திற்கு எதிராக  மருத்துவ  ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் கடும் போராட்டத்தை வருகின்றனர். முதல் அலை ஏற்படுத்திய சேதாரத்தையே  தாங்கமுடியாத சூழலில், மேலும் கடுமையான நெருக்கடியை தற்போது இரண்டாவது அலை உருவாக்கியிருக்கிறது. இந்த நிலையில், ரெம்டெசிவிர் மருந்துகள் சில தனியார் நிறுவனங்களால் பதுக்கப்படுவதால், அம்மருந்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும்,  பதுக்கல் காரணமாக கள்ளச்சந்தையில் இந்த மருந்து பல மடங்கு அதிக விலைக்கு விற்கப்படுகிற அவல நிலை ஏற்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்கு இந்த மருந்து இலவசமாக செலுத்தப்பட்டு வரும் நிலையில்,  தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெறுபவர்களுக்கு இந்த மருந்து  கிடைப்பதில்லை என்பது வேதனை அளிக்கிறது. 

ரெம்டெசிவிர் மருந்து தற்போது சென்னையில் மட்டுமே அரசு சார்பில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மருந்தை வாங்குவதற்காக தமிழகம் முழுவதுமிருந்து நோயாளிகளின் உறவினர்கள் சென்னையில் குவியும் நிலை உள்ளது. அதிகாலை முதல் காத்திருந்தாலும் அனைவருக்கும் ரெம்டெசிவிர் மருந்து கிடைப்பதில்லை. நீண்ட வரிசையில் ஒருசில நாட்கள் காத்திருந்து இந்த மருந்தைப் பெற வேண்டியுள்ளது. இதன் காரணமாக, கொரோனா மேலும் பரவுவதற்கான  வழிவகை ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனையில் ஆபத்தான கட்டத்தில் உள்ளவர்களின் உறவினர்கள் இதனால் பெரும் அலைக்கழிப்புக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர். எனவே தமிழக அரசு இந்த மருந்து விற்பனையை அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் உடனடியாக துவக்குவதோடு, தட்டுப்பாடில்லாமல் தேவைப்படும் அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, மே 1ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  ஆரம்பத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்வது குறித்து பலருக்கு தயக்கம் இருந்தாலும் தற்போது, இரண்டாவது அலையின் தீவிரத்தால் பெரும்பாலானவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வருகின்றனர். ஆனால் தடுப்பூசி கிடைப்பதில்லை என்பது அதிர்ச்சியையும், வேதனையும் அளிக்கிறது. 

முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் அடுத்த தவணையை எங்கு வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம் என அரசு கூறுகிறது. ஆனால் அவ்வாறு செல்பவர்கள் ஏற்கெனவே போட்டுக் கொண்ட மருத்துவமனையில்தான் மீண்டும் போட வேண்டும் என திருப்பி அனுப்பப்படுகின்றனர். முதல் தவணை தடுப்பூசிபோட்டுக் கொள்ள செல்பவர்களும் தடுப்பூசி இருப்பு இல்லை என திருப்பி அனுப்பப்படும் நிலை உள்ளது. இதனால் மக்களிடம் தேவையற்ற பதற்றம் ஏற்படுகிறது. எனவே தேவைப்படும் அனைவருக்கும் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். தமிழக மக்கள்  அனைவருக்கும் இலவச தடுப்பூசியை மத்திய, மாநில அரசு ஏற்பாடு செய்வதோடு அதற்கான முழுச் செலவையும்  ஏற்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி வலியுறுத்துகிறது.
 

click me!