சென்னை உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு... அதிர்ச்சியில் அரசியல் கட்சி தலைவர்கள்..!

By vinoth kumarFirst Published Apr 30, 2021, 3:15 PM IST
Highlights

வெற்றி கொண்டாட்டங்களில் ஈடுபடவும், பட்டாசுகள் வெடிக்கவும், ஊர்வலம் செல்லவும் கூடாது என அரசியல் கட்சியினருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த விதிமுறைகளை கடைபிடிப்பதில் அரசியல் கட்சி தலைவர்கள் முன்னுதாரணமாக திகழ வேண்டும் எனவும் அறிவுறுத்தினர். 

வாக்கு எண்ணிக்கையின் போது தொண்டர்களை தலைவர்கள் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. 

கொரோனா 2வது அலை பரவி வரும் சூழலில், தடுப்பூசி, ரெம்டெசிவர், ஆக்சிஜன் பற்றாக்குறைகள் குறித்த ஊடகங்களின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இதேபோல கரூர் தொகுதியில் அதிக வேட்பாளர்கள் போட்டியிடுவதால் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்ற உத்தரவிடக் கோரி போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வு, பிரச்சாரத்தின் போது கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாத அரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்காத தேர்தல் ஆணையம் தான், கொரோனா பரவலுக்கு காரணம் எனவும், தேர்தல் ஆணையம் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தலாம் எனவும் கருத்து தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் செந்தில் குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் தெரிவிக்கும் கருத்துக்களை வெளியிட ஊடகங்களுக்கு தடை விதிக்க வேண்டும். இந்த கருத்துக்களின் அடிப்படையில் தேர்தல் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய தடை விதிக்க வேண்டும் எனக் கோரி தேர்தல் ஆணையத்தின் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அதேபோல, வாக்கு எண்ணிக்கையின் போது ஊடகத்தினரை அனுமதிக்க பின்பற்றப்படும் நடைமுறைகள் குறித்தும், மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் தேர்தல் ஆணையத்தின் சார்பிலும், தமிழக அரசு சார்பிலும் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த அறிக்கை குறித்து திருப்தி தெரிவித்த நீதிபதிகள், மாநில அரசும், தேர்தல் ஆணையமும் பிறப்பித்துள்ள இந்த விதிகளை அரசியல் கட்சியினர், ஊடகத்தினர் கண்டிப்புடன் பின்பற்றி, ஒத்துழைப்பு வழங்க அறிவுறித்தினர்.

மேலும், வெற்றி கொண்டாட்டங்களில் ஈடுபடவும், பட்டாசுகள் வெடிக்கவும், ஊர்வலம் செல்லவும் கூடாது என அரசியல் கட்சியினருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த விதிமுறைகளை கடைபிடிப்பதில் அரசியல் கட்சி தலைவர்கள் முன்னுதாரணமாக திகழ வேண்டும் எனவும் அறிவுறுத்தினர். குறிப்பாக வெற்றி சான்றிதழ் பெறும்போது வேட்பாளருடன் இருவர் மட்டுமே செல்ல வேண்டும் என தலைமை நீதிபதி கூறியுள்ளார். 

இதையடுத்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த வழக்கில், தமிழக அரசு தாக்கல் செய்த அறிக்கையில், தமிழகத்தில் 1.12 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அரசு மருத்துவமனைகளில் 29,367 படுக்கைகளும்,  தனியார் மருத்துவமனைகளில் 12,196 படுக்கைகளும் கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டதையடுத்து இந்த 2  வழக்குகளின் விசாரணையை மே 5ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

click me!