அன்புமணி தொகுதியில் 8 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு... தமிழக தேர்தல் ஆணையர் திடீர் பரிந்துரை!

By Asianet TamilFirst Published Apr 21, 2019, 2:24 PM IST
Highlights

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியின் இந்தப் பரிந்துரையை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டால், இந்த 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடக்கும். 
 

தமிழகத்தில் 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப் பதிவு நடத்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பரிந்துரை செய்துள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 18-ம் தேதி 38 தொகுதிகளில் நாடாளுமன்றத் தொகுதிகளிலும் காலியாக உள்ள 18 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது. எந்த அசம்பாவித சம்பவங்களும் இன்றி தமிழகத்தில் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. ஆனால், சில வாக்குச்சாவடிகளில் பிரச்னைகள் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப் பதிவு நடத்தக் கோரிக்கைகள் வந்தன.


இந்நிலையில் தமிழகத்தில் 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை செய்துள்ளார். அதில், தருமபுரி நாடாளுமன்றத் தொகுதிக்கு உடபட்ட பாப்பிரெட்டிப்பாளையம் சட்டப்பேரவை தொகுதியில் உள்ள 8 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதேபோல பூந்தமல்லி தொகுதியில் ஒரு வாக்குசாவடியிலும் கடலூரில் ஒரு வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப் பதிவு நடத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரியின் இந்தப் பரிந்துரையை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டால், இந்த 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடக்கும். 
சிதம்பரம் தொகுதிக்கு உட்பட்ட பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்தன. ஆனால், மறுவாக்குப்பதிவு பரிந்துரையில் பொன்பரப்பி இடம்பெறவில்லை. 

click me!