
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்தார். ஆனால், அவரது மரணம் மர்மமானது என்று தமிழகத்தில் ஒவ்வொருவரும் நம்பினார்கள். அந்த வகையில் அவரது மரணம் குறித்த சர்ச்சை இன்று வரை நீங்கவில்லை. இப்போதும் நீடித்து வருகிறது.
ஜெயலலிதா மரணத்தில் என்ன மர்மம் இருக்கிறது என்பதைக் கண்டறிய விசாரணைக் குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது. நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஒரு நபர் விசாரணைக் குழு, விசாரணைகளைத் துவங்கியுள்ள நிலையில், இப்போது நடத்தப்படும் வருமான வரி சோதனைகள் இன்னும் பல பலமான சந்தேகங்களை மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள உண்மை நிலை, சசிகலா குடும்பத்தினருக்கு மட்டுமே தெரியும் என்று மாண்புமிகு அமைச்சர்களும் முதல்வர் துணை முதல்வர் என உடன் இருந்தவர்களும் பேசும்போது, பொதுமக்கள் பேசாமல் இருப்பார்களா?
அப்பலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சேர்க்கப்பட்ட புதிதில் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களில் ஒருவர், சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த டாக்டர் சிவகுமார். இவர் ஜெயலலிதாவுக்கான சிகிச்சைகளை மேற்பார்வை செய்தார். இந்த விவகாரம், அப்போதே சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
ஆனால், பின்னாளில் ஜெயலலிதாவுக்கு தனிப்பட்ட வகையில் சிகிச்சை அளித்து வந்த டாக்டர் ஷங்கர்,
தவறான சிகிச்சை காரணமாகத்தான் ஜெயலலிதா மரணமடைந்தார் என குற்றம்சாட்டியிருந்தார். இந்த நிலையில், இன்று நடைபெற்று வரும் வருமான வரித்துறை பரபரப்பு சோதனைகளில் டாக்டர் சிவகுமார் வீடும் ஒன்றாகியிருக்கிறது.
இந்த சோதனை, சசிகலாவின் போலி நிறுவனங்களின் பட்டியல் குறித்து விசாரித்து அறிய மேற்கொள்ளப்பட்டது என்று கூறப்பட்டாலும், சசிகலாவின் போலி நிறுவனத்துக்கும் டாக்டர் சிவகுமாருக்கும் என்ன தொடர்பு என்ற கேள்வி எழாமல் இல்லை. எனவே, இந்த வருமான வரித்துறையினரின் சோதனையின் போது மருத்துவர் சிவகுமார் வீட்டில் இருந்து ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான ஆவணங்கள் கிடைக்கலாம் என்ற நோக்கத்தின் அடிப்படையிலேயே இந்த சோதனை நடத்தப் படுவதாக சந்தேகத்தை எழுப்புகின்றனர். அந்த வகையில், இந்த சோதனைகளின் மூலம், ஜெயலலிதாவின் மர்ம மரணம், அல்லது முன்னர் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை குறித்த ஆவணங்கள் மூலம் பகீர் தகவல்கள் ஏதும் கசியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லாம் ஜெயலலிதாவின் ஆன்மா செய்யும் வேலை இது என்று ரகசியமாய் சமூகத் தளங்களில் காதைக் கடித்து வருகின்றனர்.