நீங்கள் சொல்லும் எல்லாவற்றையும் செய்ய தயார்.. கடைகளை மட்டும் மூட சொல்லாதீர்கள்.. கோயம்பேடு வணிகர்கள் கோரிக்கை.

By Ezhilarasan BabuFirst Published Apr 14, 2021, 6:16 PM IST
Highlights

அவர்களின் கருத்துக்களின் படி, சுழற்சிமுறையில் கடைகளை இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு என்றும், முழுமையாக கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தனர்.

வாழ்வாதாரம் பாதிக்காமலிருக்க நெறிமுறைகளை பின்பற்றி முழுமையாக கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என கோயம்பேடு சிறு மொத்த வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர். கொரோனா இரண்டாம் அலை அதிக அளவில் நோய்த்தொற்று ஏற்பட்டு வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை கோயம்பேட்டில் செயல்படக்கூடிய சில்லறை வணிக கடைகளை மூட உத்தரவிட்டு இருந்தது.  

அதனை தொடர்ந்து வியாபாரிகள் அவர்களது எதிர்ப்பை போராட்டம் மூலம் தெரிவித்தனர். அது மட்டுமல்லாமல் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கும் எனவும், கோரிக்கை வைத்தனர். இதனை பரிசீலித்த துறை சார்ந்த அதிகாரிகள் சுழற்சி முறையில் கடைகளை இயங்க அனுமதி அளித்தனர். இந்நிலையில் இதுகுறித்து இன்று உயர் மட்டத்திலான ஆலோசனை கூட்டம் கோயம்பேடு வணிக வளாகத்தில் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்டு அவர்களது கருத்துக்களை முன்வைத்தனர். 

அவர்களின் கருத்துக்களின் படி, சுழற்சிமுறையில் கடைகளை இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு என்றும், முழுமையாக கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தனர். அப்போது பேசிய அச்சங்கத்தின் தலைவர் நெல்லை கண்ணன். அரசு கூறும் எந்தவொரு நடவடிக்கைக்கும் நாங்கள் ஒத்துழைப்பு தருகிறோம். தொடர்ந்து எங்களது வியாபாரிகளில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களை 100% தடுப்பூசி போடுவதை உறுதி செய்யும் விதமாக நாளைய தினம் முதல் கட்டமாக 30 வியாபாரிகள் தடுப்பூசி செலுத்திக்கொள்கிறோம். 

இதேபோல தனிநபர் இடைவெளியை பின்பற்றுவது போன்ற அனைத்து நடவடிக்கைகளும் செயல்படுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் எங்களது ஒரே கோரிக்கை வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையில், முழுமையாக கடைகளை திறக்க அரசு அனுமதி வழங்க வேண்டும் என்பது மட்டுமே என்று கூறினார். 
 

click me!