ஈழ அகதிகளின் குழந்தைகளுக்காக ரவிக்குமார் எம்.பி முதல்வரிடம் வைத்த உருக்கமான கோரிக்கை.. செய்வாரா ஸ்டாலின்.

By Ezhilarasan BabuFirst Published Jun 3, 2021, 10:09 AM IST
Highlights

அதுபோல மேலும் பல முகாம்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக அறிகிறேன். தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்து அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களையும் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு இணையாகவே கருதி அரவணைத்துவரும்  திமுக அரசு இந்த நலத் திட்டத்தையும் அவர்களுக்கு விரிவுபடுத்த வேண்டும் 

கொரோனா தொற்றினால் பெற்றோரை இழந்த குழந்தைகள் நலத்திட்டம் -ஈழத்தமிழ் அகதிகள் குழந்தைகளுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என தமிழக முதலமைச்சருக்கு விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது இது தொடர்பாக  ரவிக்குமார் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது: “ மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு வணக்கம்!  கொரோனா நோய்த் தொற்றினால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் நல்வாழ்வுக்கான மிகச்சிறந்த திட்டமொன்றைத் தங்களுடைய தலைமையிலான அரசு அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது. பெற்றோரை இழந்து ஆதரவின்றித் தவிக்கும் குழந்தைகளின் பெயரில் தலா 5 லட்சம் ரூபாய் வைப்பீடு செய்து அந்த குழந்தைக்கு 18 வயது நிறைவடையும் போது அது வட்டியோடு வழங்கப்படுமென்றும், 

நோய்த் தொற்றில் பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைக்கு இருக்கும் தந்தை அல்லது தாய்க்கு உடனடி நிவாரணத் தொகையாக 3 லட்சம் ரூபாய் வழங்கப்படுமென்றும் அந்த நலத்திட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அகதி முகாம்களிலும் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பினால் பலர் அல்லலுற்று வருகின்றனர். அவர்களுக்கு உரிய மருத்துவ வசதிகள் செய்து தருவதற்குத் தங்களது தலைமையிலான அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்றபோதிலும் இந்த நோய்த் தொற்றில் சிலர் உயிரிழந்துள்ளனர். தர்மபுரி மாவட்டம் தும்பல அள்ளி அகதிகள் முகாமைச் சேர்ந்த பிரகாஷ் (41) என்பவர் கடந்த 16.05.2021 அன்றும்; தியாகராஜா ராசையா என்பவர் கடந்த 21.05.2021 அன்றும் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 

அதுபோல மேலும் பல முகாம்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக அறிகிறேன். தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்து அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களையும் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு இணையாகவே கருதி அரவணைத்துவரும்  திமுக அரசு இந்த நலத் திட்டத்தையும் அவர்களுக்கு விரிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.கொரோனா தொற்றால் உயிரிழந்த திரு தியாகராஜாவின் குடும்பத்தில் அனிஷ் (11)  என்ற மகனும் திருமதி இருதய நாயகி (47) என்ற மனைவியும் உள்ளனர். உயிரிழந்த  திரு பிரகாஷின் குடும்பத்தில் பிசன்யா (13) மற்றும் பிரைஸ்லின் ஜாய் (9) ஆகிய இரு குழந்தைகளும் திருமதி நதியா (38) என்ற மனைவியும் உள்ளனர். அவர்களுக்கு இந்த நலத் திட்டத்தின் அடிப்படையில் ரூபாய் 3 லட்சம் கிடைத்திட கருணையோடு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு ரவிக்குமார் எம்.பி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 

click me!