
மறைந்த முதல்வர் ஜெயலலிதா, நெருங்கி தோழி சசிகலா ஆகியோருக்கு இடையிலான உறவுகளையும், உண்மையையும் என் படத்தில் வெளிக்காட்டுவேன் என்று இயக்குநர் ராம் கோபால் வர்மா டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இந்தி, தெலுங்கு திரைப்பட உலகில் குறிப்பிடத்தகுந்த இயக்குநரான ராம் கோபால் வர்மா இதுவரை 50-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். இதில் ஆந்திர அரசின் நந்தி விருதை ஏராளமான படங்கள் பெற்றுள்ளன. சமீபத்தில் இவர் இயக்கிய ‘சூல்’ திரைப்படம் தேசிய விருதையும் பெற்றது.
சர்ச்சைக்குரிய படங்களை இயக்குவதிலும், அதேநேரம், தீவிர அரசியல் குறித்தும், நடிகர், நடிகைகள் குறித்தும் அவ்வப்போது கருத்துக்களையும் ராம் கோபால் வர்மா கூறி சிக்கலில் சிக்குவார்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப்போட்டியின் போது, பீட்டா அமைப்புக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்தார். இந்நிலையில், தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்தபின்,நிலவும் அரசியல் குழப்பம் குறித்து கருத்து தெரிவித்து வந்தார். இந்நிலையில், சசிகலாஅதிமுக பொதுச்செயலாளராகவும், முதல்வராகவும் தேர்வு செய்யப்பட்டதையடுத்து ஏற்பட்ட அரசியல் குழப்பம், சொத்துக்குவிப்பு வழக்கில் அவர் கைது செய்யப்பட்டது குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் டுவிட்டரில் பதிவிட்ட கருத்தில், “ பொறுக்கிகள் தஞ்சமடையும் இடம் பொழுதுபோக்கிடம் அரசியல் என்று பெர்நாட்ஷா கூறினார், ஆனால், தமிழகத்தில் பொழுதுபோக்கும் ரிசார்ட்டில்தான் அரசியல் பொறுக்கிகள் இருக்கிறார்கள் இது சசிகலா சொன்னது'' எனத் தெரிவித்துள்ளார்.
மற்றொரு டுவிட்டில், “ தமிழகத்தின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை ‘மன்னார் குடி மாபியா’ கட்டுப்படுத்தினால், மாநிலத்தில் ஆட்சி பெங்களூரு சிறையில் இருந்து தான் நடக்கும். சக்தி வாய்ந்த ஜெயலலிதாவின் ஆன்மா யாரையும் தண்டிக்காமல், ஆசிர்வதிக்காமல் ஏன் மவுனமாக இருக்கிறது? தமிழகத்தின் கடவுள்களும், பக்தர்களும் என்ன செய்கிறார்கள்.
ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுகளை கொடுமைப்படுத்துவதை விரும்பும் தமிழகத்தின் ஒரு சதவீத மக்கள், ஏன் அரசியல் வாதிகளால் மிருகங்களுக்கும் கீழாக தாங்கள் நடத்தப்படுகிறோம்? என்பதை நினைத்துப் பார்க்கவில்லை.
நான் எடுக்கப்போகும் அடுத்த படம் சசிகலாவைப் பற்றியது. சசிகலாவுக்கு பின்புலம் குறித்து எடுக்கப்போகிறேன். இதில் வரும் சம்பவங்களை ‘மன்னார்குடி மாபியாக்கள்’ மட்டுமே புரிந்துகொள்ள முடியும்.
ஜெயலலிதா, சசிகலாவுக்கும் இடையிலான உறவின் உண்மை குறித்து போயஸ் கார்டனில் உள்ள பணியாளர்கள் சொன்னபோது, நான் கற்பனை செய்யமுடியாத அளவுக்கு ஆச்சர்யப்பட்டேன். இதை என் திரைப்படத்தில் கொண்டு வந்து வெளிப்படுத்துவேன்.
போயஸ்கார்டனில் உள்ள தோட்டக்காரர் என்னிடம் சொன்னார், எம்.எல்.ஏ.க்கள் எல்லாம், மன்னார்குடி மாபியாக்கள், சசிகலாவால் தேர்வு செய்யப்பட்டவர்கள்'' என்று தெரிவித்துள்ளார்.