
தமிழகத்தில் குழப்பமான அரசியல் சூழலை பயன்படுத்தி அதில் அரசியல் ஆதாயம் தேட பாரதிய ஜனதா கட்சி முயற்சிக்கிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.
பெரும்பான்மை
தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக நிலவி வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்து, அதிமுக கட்சியின் சார்பில் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அவர் தலைமையிலான அமைச்சரவை, சட்டப்பேரவையில் இன்று பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளது.
குற்றச்சாட்டு
இந்நிலையில், இந்த குழப்பமான சூழல் கடந்த 10 நாட்களாக உருவாவதற்கு மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி, பின்புலத்தில் இருந்து கொண்டு ஆளுநரை இயக்கிவைத்தது என அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டின.
இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி. ராஜா டெல்லியில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர்கூறியதாவது-
குழம்பிய குட்டை
தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக குழப்பமான அரசியல் சூழல் நிலவி வந்தது. இப்போதுதான் புதிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆனால், பாரதிய ஜனதா கட்சி நிலையான ஆட்சி அமையவில்லை எனக்கூறி குழம்பிய குட்டையில் மீன்பிடிப்பது போல், குழப்பமான அரசியலில் ஆதாயம் தேட முயற்சிக்கிறது.
குதிரை பேரம் கூடாது
நாட்டின் மிக முக்கியமான மாநிலம் தமிழகம். இந்த விசயத்தில் எப்படி முடிவு எடுக்கப்போகிறார்கள் என்பதை பார்க்க வேண்டும்.
ஆளுநர் உத்தரவின் பேரில் முதல்வர் பழனிச்சாமி தலைமையிலான அ ரசு தனது அமைச்சரவையின் பெரும்பான்மையை நாளை(இன்று) சட்டசபையில் நிரூபிக்கப் போகிறது.
இந்த இடைப்பட்ட நேரத்தில் தமிழகத்தில் எந்த குதிரை பேரமும் நடந்துவிடக்கூடாது அல்லது நீதிக்கு மாறான நடைமுறைகள் நடக்காது என நம்புகிறேன்.
இதன் மூலம் தமிழக்தில் நிலவி வரும் நிலையற்ற தன்மை முடிவுக்கு வந்து, அரசியல் குழப்பம் முடிவுக்கு வரும் என நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.