கொந்தளித்த விராலிமலை தொகுதி மக்கள்!!! – தொகுதிக்கு செல்வாரா விஜயபாஸ்கர்?

First Published Feb 17, 2017, 4:21 PM IST
Highlights


புதுக்கோட்டையில் சசிகலா ஆதரவு சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக கொதித்தெழுந்த பொதுமக்கள், அவருக்கு   கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வட்டம், ராப்பூசல் கிராமத்தை சேர்ந்தவர் சி.விஜயபாஸ்கர். இவர் எம்.பி.பி.எஸ். படித்த மருத்துவர் ஆவார்.  அ.இ.அ.தி.மு.கவில் புதுக்கோட்டை மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், விராலிமலை சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.

பின்னர், 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு, மருத்துவக்கல்வி மற்றும் குடும்பநலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதைதொடர்ந்து 2016 ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் விராலிமலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவருக்கு மீண்டும் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் சுகாதாரத்துறை இலாக்கா வழங்கப்பட்டது.

தற்போது அதிமுக சசிகலா தரப்பு ஓ.பி.எஸ் தரப்பு என இரண்டு அணியாக பிரிந்து செயல்பட்டு வருகிறது. சசிகலா தரப்புக்கு அமைச்சர்கள் ஆதரவும், ஓ.பி.எஸ்க்கு பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் ஆதரவும் நீடித்து வருகிறது.

இதனிடையே சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்கள் கூவத்தூரில் உள்ள ரிசார்ட்டில் தங்க வைக்கபட்டுள்ளனர். இது ஓ.பி.எஸ் தரப்பினருக்கும் பொதுமக்களுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சசிகலா தரப்புக்கு ஆதரவாக செயல்பட்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிர்ப்பு தெரிவித்து, புதுக்கோட்டையில் அவரது தொகுதி மக்கள், அவருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் விஜயபாஸ்கரின் படத்தை துடைப்பத்தால் அடித்தும் கிழித்தும் தங்கள் எதிர்ப்பை காண்பித்து வருகின்றனர். இதனால் அமைச்சர் விஜயபாஸ்கர் தங்கள் தொகுதி பக்கமே செல்ல முடியாத நிலை உருவாகி வருகிறது.

click me!