ராமலிங்கம் கொலைக்கு வருந்தும் திருபுவனம் இஸ்லாமியர்கள் !! ஒரு சகோதரரைப் போல பழகும் மனம் படைத்தவர் என புகழாரம் !!

By Selvanayagam PFirst Published Feb 13, 2019, 10:34 AM IST
Highlights

கும்கோணத்தை அடுத்த திருபுவனம் ராமலிங்கம் கொலை செய்யப்பட்டது தங்களுக்கு மிகுந்த வருத்தம் அளிப்பதாகவும், ராமலிங்கம் இங்குள்ள அனைத்து தரப்பினருடனும் சகோதரரைப் போல் பழகுபவர் என்றும் தனது செயலுக்கு வருத்தம தெரிவித்த பின்னரும் அவர் கொலை செய்யப்பட்டது அதிர்ச்சி அளிப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

கும்பகோணத்தை அடுத்த  திருபுவனம் துண்டி விநாயகம் பேட்டையைச் சேர்ந்தவர் ராமலிங்கம். சமையல் தொழில் செய்து வந்த இவர், சமையலுக்கு ஆட்களை அழைப்பதற்காக பாகனாற்தோப்பு பகுதிக்கு சென்றார். அப்போது அங்கு சில இஸ்லாமியர்கள் அங்குள்ள தாழ்ப்பட்ட மக்களிடம் மதப் பிரச்சாரம் செய்துள்ளனர்.

இதை தட்டிக் கேட்ட ராமலிங்கம் அங்கிருந்த இஸ்லாமியர் ஒருவருக்கு திருநீறு பூசிவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் தனது கடைக்கு சென்றுவிட்டார். இது குறித்து சிந்தித்துப் பார்த்த ராமலிங்கம், தான் வரமபு மீறி நடந்து கொண்டோமோ என நினைத்துள்ளார்.

இதையடுத்து அங்கிருந்த சில இஸ்லாமிய பெரியவர்களை சந்தித்த ராமலிங்கம் தனது செயலுக்கு மன்னிப்புக் கேட்டுள்ளார். அவர்களும் சரி நீங்கள்தான் வருத்தம் தெரிவித்து விட்டீர்களே.. இனி பிரச்சனை எதுவும் வராது என்று சொல்லி அனுப்பியுள்ளனர்.

ஆனால் அன்று இரவே ராமலிங்கம் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டிருக்கிறார். இது அங்குள்ள இஸ்லாமியர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக ராமலிங்கம் இஸ்லாமிய மதத்தினருடன் ஒரு  சகோதரரைப் போல இனிமையாக பழகுபவர் என்றும் ராமலிங்கத்தை கொலை செய்தவர்களை கடுமையா தண்டிக்க வேண்டும் என்றும் அந்த இஸ்மியர்கள் தெரிவித்தனர்.
 
பாகனாற்தோப்பு பகுதியில் நடந்த சம்பவம் குறித்து இஸ்லாமியப் பெரியவர்களுடன் ராமலிங்கம் பேசினார். நடந்த சம்பவத்துக்கு அவர் வருத்தம் தெரிவித்தார். பிரச்சனை முடிந்து விட்டது என்றுதான் நினைத்தோம். ஆனால் அவர் கொல்லப்பட்டது இரு ஜாமாத்தார்களையும் வருத்தமடையச் செய்துள்ளதாக தெரிவித்தனர்.

ராமலிங்கம் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என திருபுவனம் இஸ்லாமியர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த கொலையை திமுக தலைவர் ஸ்டாலின், தி.க.தலைவர் கி.வீரமணி. சீமான் உள்ளிட்ட தலைவர்கள் கண்டித்துள்ளனர்.
 
மதம் என்பது மக்களை நல்வழிப்படுத்தத்தான். ஆனால் இங்கு சிலர் மத வெறியைத் தூண்டிவிட்டு உயிர்களை காவு வாங்குகிறார்கள். இப்போது ராமலிங்கத்தின் மனைவி தனது மூன்று பிள்ளைகளுடன் கணவனை இழந்து நிர்கதியாக நிற்கிறார்.  மதம் என்பது அன்பை போதிப்பதாகும். அறத்தையும், அன்பையும் மதம் அள்ளி வழங்கட்டும் கொலையையும், வெறியையும் அல்ல என்பதே மக்களின் விருப்பமாக உள்ளது.


தனது செயலுக்கு ராமலிங்கம் வருத்தம் தெரிவித்த பின்னரும், அவரை இப்படி கொன்றுவிட்டார்களே என்று  கதறும் ராமலிங்கத்தின் மனைவிக்கு யார் பதில் சொல்வார்கள்? 
 

click me!