அ.தி.மு.கவுடன் கூட்டணியில் இழுபறி..! தமிழக வருகையை ஒத்திவைத்த மோடி!

By Selva KathirFirst Published Feb 13, 2019, 9:33 AM IST
Highlights

மதுரை மற்றும் திருப்பூர் வருகையின் போதே கூட்டணியை இறுதியாக்க வேண்டும் என்று மோடி தரப்பில் இருந்து கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் அ.தி.மு.க பிடி கொடுக்காமல் இருந்த காரணத்தினால் அதற்கு வாய்ப்பு இல்லாமல் போனது. 

அதிமுகவுடன் கூட்டணியை இறுதி செய்வதில் இழுபறி ஏற்பட்டுள்ளதால் தனது கன்னியாகுமரி வருகையை ஒத்திவைத்துள்ளார் பிரதமர் மோடி.

மதுரை மற்றும் திருப்பூர் வருகையின் போதே கூட்டணியை இறுதியாக்க வேண்டும் என்று மோடி தரப்பில் இருந்து கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் அ.தி.மு.க பிடி கொடுக்காமல் இருந்த காரணத்தினால் அதற்கு வாய்ப்பு இல்லாமல் போனது. இதனால் மதுரை மற்றும் திருப்பூரில் பெரிய அளவில் அரசியல் பேசாமல் காங்கிரசை மட்டும் வசை பாடிவிட்டு மோடி புறப்ப்டடார். 

இந்த நிலையில் வரும் 19-ந் தேதி கன்னியாகுமரியில் மோடி பிரச்சாரம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் அதற்கான தேதியை திடீரென மார்ச் மாதத்திற்கு பா.ஜ.க ஒத்திவைத்துவிட்டது. இதற்கு காரணம் கன்னியாகுமரி பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சிகளோடு இணைந்து பிரச்சாரம் செய்ய மோடி திட்டமிட்டிருந்தார். ஆனால் கூட்டணி தற்போது வரை இறுதியாகாத காரணத்தினால் கன்னியாகுமரி வருகையை மோடி ஒத்திப்போட வேண்டிய சூழல் ஏற்பட்டது. 

இந்த நிலையில் இன்னும் ஓரிரு நாளில் அமித் ஷா தமிழகம் வர உள்ளார். அப்போது கூட்டணி தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்கிறது பா.ஜ.க தரப்பு. அதிலும் தேர்தல் அறிவிப்புக்கு முன்பே கூட்டணியை உறுதிப்படுத்த அ.தி.மு.கவிற்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. ஆனால் அ.தி.மு.கவோ தமிழகத்தில் பா.ஜ.கவிற்கு தங்களை விட்டால் வேறு வழியில்லை என்பதால் ஆட்டம் காட்டி வருகிறது. 

அதிலும் நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நடத்தக்கூடாது என்று அ.தி.மு.க தரப்பில் இருந்து பா.ஜ.கவிற்கு ஒரு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத இந்த நிபந்தனை தான் கூட்டணியை உறுதிப்படுத்தாமல் தடுப்பதாகவும் கூறுகிறார்கள். இந்த விவகாரத்தை பொறுத்தவரை பா.ஜ.க எவ்வளவு வேகமாக முடிவு எடுக்கிறதோ? அவ்வளவு வேகமாக அ.திமுக கூட்டணியை உறுதிப்படுத்தும் என்கிறார்கள்.

அதுவும் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பின் போது இடைத்தேர்தல் தேதி இல்லை என்பது உறுதியானால் உடனடியாக கூட்டணி உறுதியாகும் என்று அ.தி.மு.க மேலிடம் டெல்லிக்கு தகவலை அனுப்பியுள்ளதாகவும் கூறுகிறார்கள்.

click me!