
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் நடைபெற்று வரும் போராட்டங்களை ஒடுக்க நினைத்தால் அந்தப் போராட்டம் தமிழகம் முழுவதும் பரவும் என பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தும் மத்திய அரசின் முடிவுக்கு எதிரான போராட்டம் தற்போது மக்கள் போராட்டமாக மாறியிருக்கிறது என
இத்திட்டத்தால் வேளாண் விளைநிலங்களும், விவசாயமும் கடுமையாக பாதிக்கப்படும் என்று கூறி அங்குள்ள மக்கள் தொடர்ந்து 11 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நெடுவாசல் அருகிலுள்ள கோட்டைக்காடு கிராமத்திலும் இதேபோன்ற திட்டம் செயல்படுத்தப்படலாம் என்ற அச்சத்தில் அங்குள்ள மக்களும் நேற்று முதல் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
விவசாயிகளின் அச்சத்தைப் போக்கவும், கோரிக்கைகளை நிறைவேற்றவும் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டிருந்தால் அதைப் பாராட்டலாம். ஆனால் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சரும், பாஜக தலைவர்களும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பேசத் தொடங்கியிருப்பது வருத்தமளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்
நெடுவாசல் போராட்டத்திற்கு ஆதரவு பெருகிவரும் நிலையில், ஜல்லிக்கட்டுக்காக கடற்கரையில் நடந்த போராட்டத்தை போன்று விஸ்வரூபம் எடுத்து விடுமோ என்ற அச்சத்தில் தான் இப்போராட்டத்திற்கு நெருக்கடிகள் கொடுக்கப்படுவதாக தெரிகிறது.
பொதுநலனுக்காக போராடும் மக்களுக்கு ஆதரவு அளிப்பது தான் நல்ல ஆட்சிக்கு அழகு ஆகும்.
அதைவிடுத்து அடக்குமுறைகள் மூலம் போராட்டத்தை ஒடுக்க நினைத்தால், அது போராட்டம் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களுக்கும் பரவ வழி செய்துவிடும்.
எனவே, ஒடுக்குமுறை எனும் ஆயுதத்தை வீசி எறிந்து விட்டு, மக்களுக்கு ஆதரவாக செயல்பட்டு, நெடுவாசல் திட்டத்தை கைவிடும்படி மத்திய அரசை வலியுறுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்" என்று ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.