
அப்போலோவில் ஜெயலலிதாவை தான் பார்த்ததாகவும் அப்போது அவர் இரண்டு விரலை உயர்த்தி தன்னிடம் காண்பித்ததாகவும் செங்கோட்டையன் கூற இது போன்ற உளறல்களை இத்தோடு நிறுத்தி கொள்ளுங்கள் என ஓபிஎஸ் அணி கே.பி.முனுசாமி எச்சரித்துள்ளார்.
சமீபத்தில் ஒரு விழாவில் பேசிய கல்வி அமைச்சர் செங்கோட்டையன் திடுக்கிடும் தகவல் ஒன்றை கூறியிருந்தார். அதில் அவர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது நேரடியாக பார்த்ததாகவும் அப்போது அவரைப்பார்த்து சிரித்த முதலமைச்சர் ஜெயலலிதா செங்கோட்டையனை பார்த்து இரண்டு விரலை காட்டிடியதாவும் பேசியுள்ளார்.
இதுவரை ஜெயலலிதாவை சந்தித்தது குறித்து எந்த தகவலையும் கூறாமல் இருந்த செங்கோட்டையன் திடீரென இப்படி கூறியுள்ளது அனைவரையும் கோபமடைய செய்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த கே.பி. முனுசாமி செங்கோட்டையனுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
சமீப காலமாக யாருமே செய்ய துணியாத காரியத்தை செங்கோட்டையன் செய்துள்ளார் , தர்மத்தை அழிக்கும் முயற்சியில் அவர் இறங்கியுள்ளார். அப்போலோவில் 75 நாட்கள் மறைந்த முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது ஆளுநர் , மத்திய அமைச்சர்கள் , ராகுல்காந்தி , எதிர்கட்சித்தலைவர்கள் , அண்டை மாநில முதல்வர்கள் வந்து பார்த்தபோது அவர்களுக்கு ஜெயலலிதாவை பார்க்க அனுமதி தரப்படவில்லை .
ஜெயலலிதா சிகிச்சையில் உடல் நலம் தேறி வருவதாக அவர்களிடம் கூறப்பட்டது. அவர்களும் வெளியே வந்து அதை தெரிவித்தனர். சசிகலா மருத்துவமனையில் யாரும் ஜெயலலிதாவை சந்திக்க விடாமல் தன் ஆளுமையின் கீழ் வைத்திருந்தார்.
அன்றைய தினம் முதலமைச்சர் பொறுப்பை ஏற்றிருந்த ஓபிஎஸ் கூட ஜெயலலிதாவை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. செங்கோட்டையன் தினமும் மருத்துவமனைக்கு வருவார். நாங்கள் எல்லோரும் ஒரு அறையில் அமர்ந்திருப்போம். ஒன்றாக இருப்போம். பின்னர் புறப்பட்டு செல்வோம்.
அப்போது முதல்வரை பார்க்க முடியவில்லையே என்று செங்கோட்டையன் வருத்தப்பட்டுள்ளார். ஆனால் தற்போது தர்மத்தை அழிக்கும் விதத்தில் மருத்துவமனையில் ஜெயலலிதாவை பார்த்ததாகவும், அப்போது அவர் இரண்டு விரலை காட்டியதாகவும் கூறியுள்ளார். யாரை காப்பாற்ற இப்படி சொல்கிறீர்கள்.
நீங்கள் சசிகலாவை காப்பாற்ற துணை போகிறீர்கள், இதுவரை செய்தது போதும். இத்தோடு நிறுத்தி கொள்ளுங்கள் இல்லாவிட்டால் வேறுவகையில் நாங்கள் உங்களை சந்திப்போம் . இவ்வாறு கே.பி.முனுசாமி எச்சரித்துள்ளார்.