
முதன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, தீவிர அரசியலில் இறங்கியுள்ளார். இதற்காக ‘எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை’ என்ற அமைப்பை கடந்த 24ம் தேதி தொடங்கினார்.
இதைதொடர்ந்து, இந்த பேரவைக்கு பொருளாளராக நான் (ஜெ.தீபா) செயல்படுவேன் என கூறினார். பேரவை தலைவர் மற்றும் செயலாளர் யார்? என்பதை விரைவில் அறிவிப்பதாகவும் கூறினார்.
அதன்படி நேற்றுமுன்தினம் இரவு, தீபா ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் மாநில நிர்வாகிகளாக பேரவை தலைவராக ஆர்.சரண்யா, செயலாளராக ஏ.வி.ராஜா ஆகியோரை நியமிக்கிறேன். இவர்களுக்கு அ.தி.மு.க. தொண்டர்கள், பேரவை உறுப்பினர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன். மற்ற நிர்வாக குழு உறுப்பினர்கள் பின்னர் அறிவிக்கப்படுவார்கள் என்று கூறியிருந்தார்.
தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள சரண்யாவும், செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ள ஏ.வி.ராஜா ஆகியோர் தம்பதியாகும்.
இந்த தகவல் வெளியான உடன் தீபாவின் ஆதரவாளர்கள் சிலர் நேற்று காலை தி.நகரில் உள்ள தீபா வீட்டை முற்றுகையிட்டனர். அப்போது, பேரவை செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஏ.வி.ராஜாவை உடனடியாக மாற்றவேண்டும் என கோஷமிட்டனர். பின்னர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பும், கடும் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.
தகவலறிந்து தி.நகர் உதவி கமிஷனர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றார். அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
அந்த நேர்த்தில், எஸ்.கலாவதி அதிமுக பெண் தொண்டர், தனது கைப்பையில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள், தடுத்து நிறுத்தினர்.
அப்போது வெளியே சென்ற தீபாவின் கணவர் மாதவன், காரில் வந்தார். அவரை ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு, ‘‘செயலாளர் ஏ.வி.ராஜா பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதால் உடனடியாக அவரை மாற்றிவிட்டு நீங்கள் (மாதவன்) செயலாளராக வரவேண்டும் என்பதைத் தான் நாங்கள் அனைவரும் விரும்புகிறோம்’’ என்று கோரிக்கை விடுத்தனர்.
அவர்கள், அனைவரையும் வீட்டுக்குள் அழைத்து சென்ற மாதவன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ஒவ்வொருவரும் அவரவர் கருத்துகளை கூறினர். உடனடியாக, முதலில் அனைவரும் அமைதி காக்க வேண்டும், எந்த பிரச்சனையாக இருந்தாலும் தீபாவிடம் பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்று மாதவன் கூறி அனைவரையும் சமாதானப்படுத்தினார். பின்னர், அனைவரும் கலைந்து சென்றனர்.