
தமிழகத்தில் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு,பாமாயில் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் ரேஷன் கடைகளில் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இது குறித்து திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ரேஷன் கடைகளில் 20 கிலோ அரிசி முழுமையாக கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அரிசி கோதுமை, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுவதில்லை என ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.பருப்பு, பாமாயில் தொடர்பான டெண்டர்கள் கூட இதுவரை விடப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
பினாமி ஆட்சியில் பொது விநியோகத் துறை அனாதையாக நிற்கிறது என்றும் இந்திட்டம் முறையாக செயல்படவில்லை என்றும், அமைச்சர்கள் ஊழல் மழையில் நனைந்து கொண்டிருக்கிறார்கள் எனவும் ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
தேசிய உணவு பாதகாப்புத் திட்டத்தில் தமிழகம் கையெழுத்திட்டுள்ளதால் பொது விநியோகத்துறை எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.
திமுக ஆட்சிக்காலத்தில் பொது விநியோகத் திட்டத்தை உயர்நீதிமன்றம் பாராட்டியதை சுட்டிக்காட்டிய ஸ்டாலின் இத் திட்டத்தில் தொடர்ந்து குழப்பம் நீடித்தால் போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்தார்.