
தீபா தொடர்ந்து குழப்பமான முடிவு எடுப்பதால் தொண்டர்கள் மத்தியில் சோர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் விலகி ஓபிஎஸ்சை சந்தித்து அவரது அணியில் இணைந்தனர்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு திடீரென தோன்றிய அவரது அண்ணன் மகள் தீபா , ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது உள்ளிட்ட பல விஷயங்களை முன் வைத்து பொதுவெளிக்கு வந்த தீபாவை சசிகலாவை விரும்பாத தொண்டர்கள் பொதுமக்கள் அதிகம் விரும்பினர்.
பார்ப்பதற்கு ஜெயலலிதா போல் சாயலில் இருந்த தீபா தங்களுக்கு தலைமை தாங்க வேண்டும் என ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அவர் பின்னால் அணிவகுத்தனர். அவரது வீட்டுமுன்னர் குவிந்தனர். தனது முடிவை பிப்.24 அன்று அறிவிப்பதாக கூறினார் தீபா.
இந்நிலையில் ஓபிஎஸ் தனி அணியாக வந்தவுடன் அவருக்கு ஆதரவு கூடியது. அவருடன் இணைந்து சசிகலாவை எதிர்க்கப்போவதாக அறிவித்த தீபா திடீரென தனது முடிவை மாற்றிகொண்டு எம்.ஜி.ஆர் அம்மா தீபா என்ற பெயரில் பேரவையை துவக்கினார்.
நிர்வாகிகளை நியமனம் செய்தார். இதில் தனது தோழி சரண்யா , தனக்கு தெரிந்த ராஜா என்பவர்களை முக்கிய நிர்வாகிகளாக அறிவித்தார். ராஜ என்பவர் மீது மோசடி வழக்குகள் உள்ளது, அவர் இப்போதே பேரவைக்கு ஆட்களை பொறுப்புக்கு போடுவதாக கூறி பணம் திரட்டி வருகிறார் என்று குற்றம் சாட்டியவர்கள் தீபா வீட்டில் கேரோ செய்தனர்.
இந்நிலையில் தீபா ஆதரவாளர்கள் சுமார் 1000 பேர் நேற்று மாலை திடீரென தீபா அணியிலிருந்து விலகி ஓபிஎஸ்சை சந்தித்து அவரது அணியில் இணைந்தனர்.அவர்களை ஓபிஎஸ் வரவேற்றார். தீபா எடுக்கும் பக்குவமில்லாத முடிவுகளால் அவரது அணி சிதற துவங்கியுள்ளதை இந்த சம்பவம் வெளிக்காட்டுகிறது.