
கடந்த செப்டம்பர் 22ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை, மத்திய அமைச்சர்கள், திரை நட்சத்திரங்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் சென்றும் பார்க்க முடியவில்லை. அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து டாக்டர்களிடம் விசாரித்து அறிந்து கொண்டனர்.
அதே நேரத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பா உள்பட பலர் உயர்நீதிமன்றத்தில், பொது நல வழக்கு தொடர்ந்தனர். அதில், ஜெயலலிதாவின் புகைப்படம் வெளியிட வேண்டும். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து தெரிவிக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.
அதேபோல் பிரான்ஸ் நாட்டில் இருந்து தமிழச்சி என்ற பெண், ஜெயலலிதா குறித்து பேஸ்புக்கில் பல்வேறு பதிவுகளை வெளியிட்டார். இதனால், பரபரப்பு நிலவியது. இதற்கிடையில், கடந்த டிசம்பர் 5ம் தேதி ஜெயலலிதா காலமானார். 6ம் தேதி அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், ஜெயலலிதாவின் மறைவில் மர்மம் இருப்பாக அரசியல் கட்சியினர் கூறி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன், இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி, தனக்கு அதில் அதில் சந்தேகம் உள்ளது. தேவைப்பட்டால், சடலத்தை தோண்டி எடுத்து பரிசோதனை செய்யவும் நேரலாம் என கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நாளை டெல்லியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்திக்க உள்ளார்.
அப்போது, சடந்த 18ம் தேதி சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு சம்பவம் குறித்தும், தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேச இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவில் சந்தேகம் இருப்பதாகவும், இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட கோரிக்கை விடுக்க உள்ளதாகவும் தெரிகிறது.