
ஓபிஎஸ்சை தொடர்ந்து எடப்பாடிக்கும் செக் வைக்கப்பட்டுள்ளது. டெல்லி சென்றுள்ள அவர் தனியாக பிரதமரை சந்திக்க செல்லக்கூடாது என்று மூன்று அமைச்சர்களை அனுப்பி உள்ளார்.
அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதல்வராக ஓபிஎஸ் பதவி ஏற்றார். ஓபிஎஸ் சுயமாக செயல்பட்டதால் அவரை சசிகலா தரப்பினர் அகற்றும் முயற்சியில் ஈடுபட்டதால் அதிமுக இரண்டு அணியாக பிரிந்தது.
டெல்லிக்கு ஓபிஎஸ் சென்று பிரதமரை சந்தித்த போது தம்பிதுரை தலைமையில் ஒரு அணி பிரதமரை சந்திக்க முயன்று சந்திக்க முடியாமல் கடுமையான கோபத்துடன் தம்பிதுரை பேட்டி அளித்தார்.
அதன் பின்னர் நடந்த நிகழ்வுகளில் ஓபிஎஸ் டெல்லியில் தன்னை அவமானப்படுத்தியதாக பேட்டி அளித்தார். இதனிடையே பல நிகழ்ச்சிகள் நடந்து சசிகலா ஆதரவு முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்றார். ஆனால் அவரை இயக்குவதில் தினகரன் தரப்புக்கும் , நடராஜன் திவாகரன் தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
தினகரனுக்கும் டாக்டர் வெங்கடேசுக்கும் இடையே கூட மோதல் எழுந்ததாக கூறப்பட்டது. இதை எடப்பாடியும் நன்றாக பயன்படுத்திகொள்கிறார் என்ற சந்தேகமும் இருதரப்புக்கும் எழுந்துள்ளது. இதையடுத்து எடப்பாடிக்கு உதவ 5 அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
ஆனால் அது அவரை கண்காணிக்க போடப்பட்ட குழு என்று அதிமுக தரப்பில் கூறுகின்றனர். இந்த நிகழ்வு தற்போது முதல்வரின் டெல்லி பயணத்திலும் எதிரொலித்துள்ளதாக கூறப்படுகிறது. டெல்லிக்கு பிரதமரை சந்திக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதனும் சென்றுள்ளார்கள்.
ஆனால் திடீரென அமைச்சர்கள் ஜெயகுமார்,எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் டெல்லி சென்றனர். மத்திய அமைச்சர்களை சந்திக்கும் போது முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் இம்மூவரும் உடனிருப்பார்கள் என கூறப்படுகிறது. இதன் மூலம் ஓபிஎஸ் போல் எடப்பாடியை விட்டுவிட அவர்கள் தரப்பில் தயாராகா இல்லை என தெரிகிறது.