பாமக, அதிமுக கட்சிகளை சேர்ந்த அப்பாவிகள் மீது போலீஸ் பொய் வழக்கு போட்டுட்டாங்க... கவலையில் ராமதாஸ்

By sathish kFirst Published Apr 20, 2019, 11:46 AM IST
Highlights

அதிமுக, பா.ம.க ஆகிய கட்சிகளைச் சேர்ந்த அப்பாவிகள் மீது காவல்துறையினர் பொய்வழக்கு பதிவு செய்துள்ளனர்,  உண்மையான வன்முறையாளர்கள் தண்டிக்கப்படவேண்டும் எனக் கூறி ராமதாஸ் அறிக்கை  வெளியிட்டுள்ளார்.

அதிமுக, பா.ம.க ஆகிய கட்சிகளைச் சேர்ந்த அப்பாவிகள் மீது காவல்துறையினர் பொய்வழக்கு பதிவு செய்துள்ளனர்,  உண்மையான வன்முறையாளர்கள் தண்டிக்கப்படவேண்டும் எனக் கூறி ராமதாஸ் அறிக்கை  வெளியிட்டுள்ளார்.

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பில் உள்ள தலித் மக்கள் தங்கள் வீட்டு சுவர்களில் விசிக தலைவர் திருமாவளவனின் சின்னமான பானை சின்னத்தை வரைந்திருந்ததால் அப்பகுதிக்குள் புகுந்த வன்னிய மக்கள் சிலர் வீடுகளை அடித்து நொறுக்கினர். மேலும் அங்கிருந்த சில தலித் மக்களையும் தாக்கினர். இதனால் நேற்று முன் தினம் பரபரப்பான சூழல் உருவானது. தாக்குதலில் காயம்பட்டவர்கள்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

இதையடுத்து பொன்பரப்பி வன்முறை குறித்து அவர்  வெளியிட்டுள்ள அறிக்கையில்; மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவின் போது, சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பொன்பரப்பியில் அப்பாவிகள் மீது மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தி, வன்முறை வெறியாட்டம் நடத்தியிருக்கிறது. இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக, பாதிக்கப்பட்டவர்கள் மீதே பொய்யான வழக்குகளை பதிந்து, அவர்களின் குடும்பத்தினருக்கு காவல்துறை தொல்லை தருவது கண்டிக்கத்தக்கது.

சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பொன்பரப்பியில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருந்த போது, அங்கு வாக்களிக்கச் சென்ற பெண்களை விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் அருவருக்கத்தக்க வார்த்தைகளால் திட்டியுள்ளனர். ‘‘சிதம்பரம் தொகுதியில் எங்களின் கட்சி வெற்றி பெற்ற பிறகு, இங்குள்ள பெண்களின் கதி என்ன ஆகப்போகிறது பாருங்கள்’’ என்று மிரட்டியுள்ளனர். அதுமட்டுமின்றி, அங்குள்ள கடையில் பணியாற்றிய வீரபாண்டியன் என்ற ஊனமுற்ற தொழிலாளரை அந்தக் கும்பல் கடுமையாகத் தாக்கிக் காயப்படுத்தியுள்ளது. அதைத் தொடர்ந்து வாக்களிப்பதற்காகச் சென்ற சுப்பிரமணியன் என்ற முதியவரையும் அந்த கும்பல் கொடூரமாக தாக்கி உள்ளது. இதில் காயமடைந்த இருவரும் அரசு மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வருகின்றனர்.

விசிகவினரின் இந்த அட்டகாசத்தை அங்கிருந்த மற்றவர்கள் தட்டிக்கேட்டனர். அதற்காக அவர்களையும் விசிக மற்றும் கூட்டணிக் கட்சியினர் தாக்கியதைத் தொடர்ந்தே இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் அதிமுக, பா.ம.கவைச் சேர்ந்தவர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் காயமடைந்துள்ளனர். அதுமட்டுமின்றி, மஞ்சள் சட்டை அணிந்திருந்தார் என்ற ஒரு காரணத்திற்காகவே செய்தியாளர் ஒருவரை கொடூரமான முறையில் விசிக தாக்கியுள்ளனர். அவர் மருத்துவமனையில் உள்ளார். உண்மை நிலை இவ்வாறு இருக்க விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அளித்த புகாரின் அடிப்படையில் அதிமுக, பா.ம.க ஆகிய கட்சிகளைச் சேர்ந்த அப்பாவிகள் மீது காவல்துறையினர் பொய்வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்களின் வீடுகளுக்கு சென்று குடும்பத்தினரை அச்சுறுத்துவது உள்ளிட்ட செயல்களில் காவல்துறை ஈடுபட்டுள்ளது.

திமுக, விசிகவின் மாவட்ட நிர்வாகிகள் கொடுத்துவரும் அழுத்தம் காரணமாகவே இத்தகைய ஒரு சார்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. வன்முறையை தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் பாதிக்கப்பட்டவர்கள் மீதே வழக்குப் பதிவு செய்வதும், அவர்களின் குடும்பத்தினரை காவல்துறை அச்சுறுத்துவதும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. இத்தகையப் போக்கை கைவிட்டு, வன்முறையை தூண்டியோர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

click me!