தமிழக அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு வரும் நிலையில், துணை வேந்தர்கள் தேர்ந்தெடுக்க தேடல் குழுவை அமைப்பதில் ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லையென பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் - தமிழக அரசு மோதல்
தமிழக உயர்கல்வித்துறை சார்பாக அமைக்கப்பட்ட தேடல் குழுவை திரும்ப பெற வேண்டும் என தமிழக ஆளுநர் ரவி தெரிவித்துள்ள நிலையில், இது தொடராபக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சென்னை பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தரை அடையாளம் காண்பதற்காக தமிழக அரசால் கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட தேடல் குழுவை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று தமிழக ஆளுனர் அறிவுறுத்தியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
தேடல் குழு அமைப்பதில் ஆளுனருக்கு எந்த அதிகாரமும் இல்லாத நிலையில், ஆளுனரின் இந்த தலையீடு தேவையற்ற குழப்பங்களையே ஏற்படுத்தும். சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கௌரி கடந்த ஆகஸ்ட் 20-ஆம் நாள் ஓய்வுபெற்ற நிலையில், புதிய துணைவேந்தரை அடையாளம் காண்பதற்கான 3 உறுப்பினர் தேடல் குழு அதற்கு முன்பாகவே அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆளுநர் ரவியின் உத்தரவு
தேடல் குழுவுக்கான சென்னை பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழு, பேரவைக் குழு ஆகியவற்றின் பிரதிநிதிகள் கடந்த ஏப்ரல் மாதமே தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டனர். பல்கலைக்கழக வேந்தரான ஆளுனரின் பிரதிநிதியை ஆளுனர் மாளிகை தேர்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டதால் தேர்வுக்குழு அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இத்தகைய சூழலில் வரலாற்றில் இல்லாத வகையில், 4 உறுப்பினர்கள் கொண்ட தேடல் குழுவை கடந்த செப்டம்பர் 6ஆம் நாள் தமிழக ஆளுனரே தன்னிச்சையாக அறிவித்தார். அதில் வழக்கமாக இடம்பெற வேண்டிய 3 உறுப்பினர்களுடன் பல்கலைக்கழக மானியக்குழுவின் பிரதிநிதி ஒருவரும் சேர்க்கப்பட்டிருந்தார். இது குறித்த அறிவிப்பு தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களில் இரு வாரங்களுக்கு முன் விளம்பரமாகவும் வெளியிடப்பட்டிருந்தது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
ஆளுனர் மாளிகையின் அறிவிப்பு வெளியானதற்கு அடுத்த வாரம், கடந்த 13-ஆம் தேதி தமிழக அரசின் சார்பில் சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தரை அடையாளம் காண்பதற்கான தேடல் குழு அமைத்து அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்பட்டது. அதில் ஆளுனர் மாளிகை அறிவிக்கையில் இடம்பெற்றிருந்த நால்வரில் பல்கலைக்கழக மானியக் குழுவின் பிரதிநிதி மட்டும் நீக்கப்பட்டு மீதமுள்ள மூவரும் இடம் பெற்றிருந்தனர். அரசு வெளியிட்ட அந்த அறிவிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்று தான் ஆளுனர் வலியுறுத்தியிருக்கிறார். ஆளுனரின் இந்த நிலைப்பாடு நியாயமற்றது ஆகும்.
ஆளுநருக்கு அதிகாரம் இல்லை
சென்னை பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகள் அனைத்தும் சென்னை பல்கலைக்கழக சட்டத்திற்கு உட்பட்டு தான் அமைய வேண்டும். சென்னை பல்கலைக்கழக சட்டத்தின்படி தேடல் குழுவில் மூவர் மட்டும் தான் இடம் பெற முடியும். அதன்படி தான் மூவர் கொண்ட தேடல் குழுவை அமைத்து தமிழக அரசின் உயர்கல்வித்துறை அறிவிக்கை வெளியிட்டிருக்கிறது. இதில் தமிழக அரசின் செயல்பாடுகள் சட்டத்தின்படியே உள்ளன. அரசின் அறிவிக்கையை திரும்பப் பெறும்படி ஆளுனரால் கோர முடியாது. தமிழ்நாட்டின் ஆளுனர் என்பவர் அவரது பதவியின் வழியாக தமிழ்நாட்டில் உள்ள 22 பல்கலை.களில் 21 பல்கலைக்கழகங்களுக்கு வேந்தராக இருக்கிறார்.
சிக்கலையும், குழப்பத்தையும் ஏற்படுத்தும்
வேந்தர் என்ற முறையில் தேடல் குழுவால் பரிந்துரைக்கப்படும் 3 பேர் கொண்ட பட்டியலில் இருந்து ஒருவரை துணைவேந்தராக தேர்ந்தெடுக்கும் அதிகாரம் மட்டும் தான் ஆளுனருக்கு வழங்கப்பட்டிருக்கிறதே தவிர, தேடல் குழுவை அமைப்பதற்கான அதிகாரம் ஆளுனருக்கு வழங்கப்படவில்லை. மாறாக, தேடல் குழு அமைக்கப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசிதழில் வெளியிடும் அதிகாரம் உயர்கல்வித்துறை செயலாளருக்கு உண்டு.
அதை முறையற்ற செயல் என்று கூறுவதற்கு ஆளுனர் மாளிகைக்கு எந்த அதிகாரமும் கிடையாது. தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட தேடல் குழு கடந்த 13-ஆம் தேதி செயல்பாட்டுக்கு வந்து விட்டது. ஆனால், தமிழக அரசின் தேடல் குழுவால் துணைவேந்தர் பதவிக்கு பரிந்துரைக்கப்படும் மூவர் பெயர் கொண்ட பட்டியலை ஆளுனர் அவருக்கு உரிய அதிகாரத்தை பயன்படுத்தி ஏற்க மறுக்கும் வாய்ப்பு உள்ளது. அது பெரும் சிக்கலையும், குழப்பத்தையும் ஏற்படுத்தும்.
வளர்ச்சிக்கு உதவாது; மாறாக வீழ்ச்சிக்கே வழிவகுக்கும்
இந்த விவகாரத்தில் தமிழக அரசுக்கும், ஆளுனருக்கும் இடையில் கருத்தொற்றுமை ஏற்படும் வரையிலோ அல்லது நீதிமன்றங்கள் தலையிட்டு தெளிவான வழிகாட்டுதலை வழங்கும் வரையிலோ சென்னை பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தர் நியமிக்கப்பட வாய்ப்பில்லை. கோவை பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் இதே சிக்கல் நீடிப்பதால் அரசுக்கும், ஆளுனருக்கும் இடையிலான மோதல் தமிழ்நாட்டில் உயர்கல்வித்துறையின் வளர்ச்சிக்கு உதவாது; மாறாக வீழ்ச்சிக்கே வழிவகுக்கும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்