
கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் ஓட்டலில் பாமக நிறுவனர் ராமதாஸ், பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது :-
தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் அகற்ற வேண்டும் என பாமக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வரவேண்டும் என்பதில், பாமக முழு மூச்சுடன் செயல்பட்டு கொண்டே இருக்கிறது.
மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள 2500 மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என பாமக வலியுறுத்தி வந்தது. இதன் எதிரொலியாக தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அந்த உத்தரவு இதுவரை எந்த அளவுக்கு செயல்பட்டு என்பது தெரியாமல் உள்ளது.
தற்போது தமிழகத்தில் நடக்கும் ஆட்சி பினாமி அரசாக உள்ளது. கேவலமான நிலைமை தமிழகத்தில் உள்ளது. தற்போது ஆட்சியில் உள்ள அதிமுகவின் 122 எம்எல்ஏக்களில் 5 பேர், மாறினால் போதும், இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும். கட்சியில் இருந்து விலகாமல் இருக்க ரூ.1000 கோடியை பிரித்து, ரூ.11.5 கோடியை கொடுத்துள்ளனர்.
படித்த இளைஞர்களுக்கு வேலை இல்லாமல் உள்ளது. எங்கு சென்றாலும் லஞ்சமும், சிபாரிசும்தான். சத்துணவு பணியாளர் வேலைக்கு கூட எம்எல்ஏ சிபாரிசு செய்யும் நபர்களுக்கே வேலை வழங்க வேண்டும் என கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவில் மர்மம் இருப்பதாக, பல்வேறு புகார்கள் வந்து கொண்டே இருக்கின்றன. இதுகுறித்து சிபிஐ விசாரணை அமைக்க வேண்டும்.
ஜெயலலிதா போயஸ் கார்டன் வீட்டில் சசிகலாவால் தாக்கப்பட்டார் என்ற செய்தி உலாவந்தது. மேலும், இந்த தாக்குதலில் முதுகில் காயமடைந்த ஜெயலலிதாவுக்கு, அவரது வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டதாக வடமாநில நாளிதழ்கள், டிவி சேனல்களில் செய்திகள் வந்தன. ஆனால், தமிழகத்தில் உள்ள ஒரு பத்திரிகையிலும் வரவில்லையே… ஏன் அப்படி நடந்தது.
யார் என்றே தெரியாத ஒருவர், ஜெயலலிதாவை போல அலங்காரம் செய்து, நான் தான் அதிமுகவின் வாரிசு என கூறுகிறார். அவர் யார். ஜெயலலிதாவின் கொள்ளுபேத்திக்கு கொள்ளுபேத்தியாக இருக்குமோ. அவரை பற்றி தெரிந்தால், நீங்களே கூறலாம்.
மத்திய அரசு திட்டமிட்டுள்ள ஹைட்ரோ கார்பன் பிரச்சனைக்கு, நெடுவாசல் கிராமத்தில் நடக்கும் போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இதனை சுமுகமாக முடித்து வைக்க மத்திய அரசும், மாநில அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக அரசு அறிவித்தது போல் 500 டாஸ்மாக் கடைகள் மட்டுமின்றி, நெடுஞ்சாலைகளில் செயல்படும் 2500 டாஸ்மாக் கடைகளையும் அகற்ற வேண்டும். டாஸ்மாக் கடைகள் அகற்றும் பணி மார்ச் 31க்குள் நடத்தவேண்டும். இல்லாவிட்டால், பாமக சார்பில் மாநில அளவில் மாபெரும் போராட்டம் நடைபெறும். அதேபோல், சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனை தலைவிரித்தாடுகிறது. வரும் கோடை காலத்தில் மக்களின் நிலை பெரிய அளவில் பாதிக்கப்படும். இதனால், மக்களின் இயல்பு நிலை கடுமையாக பாதிப்பாகும். எனவே தமிழகம் முழுவதும் குடிநீர் பிரச்சனையை போக்க போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.