
கதை கேளு... கதை கேளு கழகத்தின் கதை கேளு! என்ற தலைப்பில் கடந்தகாலத்தில் நடந்த அரசியலை தெளிவாக விளக்கும் டாக்டர் ராமதாஸ் 'மண்ணை கவ்விய ஜெயலலிதா!' என்ற தலைப்பில் இன்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது;
மாற்றம் ஒன்றே மாறாதது என்பார்கள்... ஆனாலும் ஜெயலலிதாவும் மாறாதவர் தான். 1991 முதல் 1996 வரையிலான ஆட்சியில் அதிமுக ஆட்சியில் கொடுமைகளை அனுபவித்ததால் தான் அடுத்து வந்த 1996 தேர்தலில் அதிமுகவுக்கு படுதோல்வியை பரிசாக தந்தார்கள். அதன்பின் 1998 தேர்தலில் கூட்டணி வலிமையால் தான் அதிமுக வெற்றி பெற்றது.
2001-ஆம் ஆண்டு தேர்தலிலும் பா.ம.க., த.மா.கா., காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்திருந்ததால் ஜெயலலிதா திருந்தியிருப்பார்... நல்லாட்சி தருவார் என்று அனைவரும் நம்பினார்கள். நாங்களும் நம்பினோம். ஆனால், ஜெயலலிதா மாறவே இல்லை என்பது கலைஞர் கைது செய்யப்பட்டதிலேயே தெரிந்தது. அதனாலேயே அதிமுக கூட்டணியிலிருந்து விலகினோம். ஆனால், ஜெயலலிதா மட்டும் திருந்தவேயில்லை என்பது முந்தைய அத்தியாயத்தில் நான் பட்டியலிட்டிருந்த மக்கள் விரோத செயல்களில் இருந்தே தெரிந்து கொள்ளலாம்.
ஜெயலலிதாவுக்கு நம்பி வாக்களித்து ஏமாந்த மக்கள், அதற்காக பழிதீர்க்க ஒரு வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆட்சியாளர்களின் அத்துமீறல்களுக்கும், அடக்குமுறைகளுக்கும் பதிலடி கொடுக்க மக்களுக்கு கிடைக்கும் ஒரே வாய்ப்பு தேர்தல் தானே.
முன்கூட்டியே தேர்தல்
அந்த வாய்ப்பு 2004-ஆம் ஆண்டில் சற்று முன்கூட்டியே மக்களுக்கு கிடைத்தது. மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் பதவிக்காலம் 2004-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை இருந்தது. ஆனால், தங்களுக்கு மக்களிடம் அதிக ஆதரவு இருப்பதாக பாரதிய ஜனதா தலைமை நம்பியதால் 6 மாதங்களுக்கு முன்பே தேர்தலை சந்திக்க முடிவு செய்தது. அதன்படி 2004-ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரிக்கும் சேர்த்து மே 10-ஆம் தேதி கடைசி கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
1998, 1999 என இரு தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்றிருந்த பாரதிய ஜனதா, 2004-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பே மத்தியில் மீண்டும் ஆட்சியைப் பிடித்து விட்ட மனநிலையில் இருந்தது. 2004 தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு சில மாதங்களில் வாஜ்பாயின் உடல்நிலையைக் காரணம் காட்டி, அவரை ஓரங்கட்டி விட்டு அத்வானியை பிரதமர் ஆக்குவது, அயோத்தியில் இராமர் கோவில் கட்டுவது உள்ளிட்டவை பாரதிய ஜனதாவின் திரைமறைவுத் திட்டங்களில் சிலவாக இருந்தன. ஆனாலும், அயோத்தி இராமர் கோவில் விவகாரத்தில் தீர்மானமாக சில விஷயங்களை செய்து முடிக்க பாரதிய ஜனதாக் கட்சி தயாராகிவிட்டது என்பது வெளிப்படையாக தெரிந்தது. அயோத்தி பிரச்சினையை மீண்டும் எழுப்புவது நல்லதல்ல என்று கூட்டணிக் கட்சிகள் எச்சரித்தாலும் அதைக் கேட்க அவர்கள் தயாராக இல்லை. அதுமட்டுமின்றி அனைத்துத் தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவராக விளங்கிய வாஜ்பாய் கிட்டத்தட்ட ஓரங்கட்டப்பட்டிருந்தார். அனைத்து விஷயங்களிலும் அத்வானியையே ஆர்.எஸ்.எஸ் முன்னிலைப்படுத்தியது.
தமிழகத்தில் புதிய அணி
இதனால் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்த பா.ம.க., தி.மு.க., மதிமுக ஆகிய கட்சிகள் கூட்டணியிலிருந்து வெளியேறி தனி அணி அமைக்க முடிவு செய்தன. காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகளும் அந்த அணியில் இணைய முன்வந்தன. அந்த அணிக்கு ஜனநாயக முற்போக்குக் கூட்டணி என்று பெயரிடப்பட்டது. அந்த அணி தேசிய அளவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் அங்கமாக இருக்கும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் அதிக எண்ணிக்கையிலான கட்சிகள் சேர்ந்ததால் தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் ஏற்படும் வாய்ப்பு இருந்தது. 1999-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் பா.ம.க., மதிமுக, பாஜக, தமிழக ராஜிவ் காங்கிரஸ் ஆகியவை மட்டும் தான் இருந்தன. ஆனால், அந்தக் கூட்டணியிலிருந்து 6 இடங்களில் போட்டியிட்ட பாரதிய ஜனதாவும், தலா ஓரிடத்தில் போட்டியிட்ட தமிழக ராஜிவ் காங்கிரஸ் கட்சி மற்றும் எம்.ஜி.ஆர் அதிமுகவும் மட்டுமே விலகியிருந்த நிலையில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் புதிதாக கூட்டணிக்கு வந்தன.
அதேநேரத்தில் எதிர்தரப்பில் அதிமுகவும், பாரதிய ஜனதாவும் கூட்டணி அமைத்திருந்தன. அக்கூட்டணியை வீழ்த்துவது தான் முதன்மை நோக்கம் என்பதால் ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் தொகுதிப் பங்கீட்டில் விட்டுக்கொடுக்கும் போக்கை கடைபிடிக்க முடிவு செய்தன.
விட்டுக் கொடுத்த பா.ம.க.
அதன்படி, 1999 தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகளின் எண்ணிக்கையிலிருந்து கூட்டணிக்கு தலைமை வகிக்கும் திமுக 3 இடங்களையும், பா.ம.க., மதிமுக, ஆகியவை தலா ஓரிடத்தையும் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. அதன்படி 1999 தேர்தலில் 19 இடங்களில் போட்டியிட்ட திமுகவுக்கு 2004 தேர்தலில் 16 இடங்கள் மட்டும் ஒதுக்கப்பட்டன. 5 இடங்களில் போட்டியிட்ட மதிமுகவுக்கு 4 இடங்கள் வழங்கப்பட்டன. அந்த வகையில் 1999 தேர்தலில் புதுவையையும் சேர்த்து 8 இடங்களில் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சிக்கு 7 இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும். அவ்வாறு ஒதுக்கினால் மீதம் 13 தொகுதிகள் மட்டுமே இருக்கும். காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்களும், இடதுசாரி கட்சிகள் இரண்டுக்கும் தலா 2 இடங்களும் வழங்குவது மட்டுமே கவுரவமாக இருக்கும் என்று கூட்டணித் தலைவர்கள் கருதினர். அப்போது திமுக சார்பில் பா.ம.க.விடம் பேசிய தலைவர்கள், பா.ம.க.வுக்கு வழங்கப்பட வேண்டிய 7 தொகுதிகளில் புதுவையையும் சேர்த்து 6 இடங்களை பெற்றுக் கொள்ளும்படியும், அடுத்த சில மாதங்களில் நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளருக்கு திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆதரிப்பார்கள் என்றும் கூறினார்கள். கூட்டணியின் வெற்றி ஒன்றே குறிக்கோளாக இருந்ததால் அந்த ஏற்பாட்டுக்கு பாட்டாளி மக்கள் கட்சி ஒப்புக்கொண்டது.
ஒரு விளக்கம்
இந்த இடத்தில் ஒரு விளக்கத்தை அளிக்க விரும்புகிறேன். 2004-ஆம் ஆண்டு மாநிலங்களவைத் தேர்தலில் அன்புமணி இராமதாஸ் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதுபற்றி திமுகவினர் குறிப்பிடும்போது புறவாசல் வழியாக வென்றதாகவும், அந்த வெற்றிக்கு திமுக தான் காரணம் என்றும் கூறுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். ஆனால், உண்மை அதுவல்ல. 2004 தேர்தலில் பா.ம.க.வுக்கு வழங்கப்பட வேண்டிய 7 இடங்கள் வழங்கப்பட்டிருந்தால் அதில் மருத்துவர் அன்புமணியோ அல்லது வேறு யாருமோ போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்திருக்கலாம். ஆனால், திமுக கூட்டணியில் அதிக கட்சிகள் இருந்ததால் பா.ம.க.வுக்கு 6 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டன. இதனால் பா.ம.க.வுக்கு இழப்பு மட்டுமே. உண்மையில் 2004 ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் திமுகவுக்கு 31 பேர் மட்டுமே இருந்தனர். மாநிலங்களவைத் தேர்தலில் வெற்றி பெற 34 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
ஆனால், 31 உறுப்பினர்களை வைத்துக் கொண்டு திமுகவே நினைத்தாலும், பிற கட்சிகளின் துணை இல்லாமல் மாநிலங்களவைத் தேர்தலில் வெற்றிபெற முடியாது. அதேநேரத்தில் அந்த நேரத்தில் பா.ம.க.வுக்கு 20 உறுப்பினர்கள் இருந்தார்கள். அவர்களின் ஆதரவுடன் தான் பா.ம.க. போட்டியிட்டது. அவர்களுடன் திமுகவின் 14 உறுப்பினர்களின் ஆதரவு மட்டும் தான் பா.ம.க.வுக்கு தேவைப்பட்டது. பாட்டாளி மக்கள் கட்சி ஒரு மக்களவைத் தொகுதியை விட்டுக் கொடுத்ததற்காக 14 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவை வழங்கியது தான் திமுக செய்த உதவி. இந்த உதவிக்கு நன்றிக்கடனாக அடுத்து வந்த 3 மாநிலங்களவைத் தேர்தல்களில் திமுக வேட்பாளர்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் 18 உறுப்பினர்கள் ஆதரவளித்தனர். அதாவது பா.ம.க. ஆதரவுடன் 3 திமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள் என்பதை தமிழக மக்களுக்கு இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
சரி... 2004 மக்களவைத் தேர்தலுக்கு வருவோம்...
அதிமுக அணியில் மோதல்
அதிமுகவுக்கும், பாரதிய ஜனதாவுக்கும் கூட்டணி அமைந்தாலும் கூட தொகுதிப் பங்கீட்டில் மிகப்பெரிய சிக்கல் வெடித்தது. பாரதிய ஜனதாவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை வழங்க ஜெயலலிதா மறுத்தார். உதாரணமாக தமிழக காங்கிரஸ் தலைவராக உள்ள திருநாவுக்கரசர் அப்போது பாரதிய ஜனதாவில் இருந்தார். அவருக்காக புதுக்கோட்டை தொகுதியை பாரதிய ஜனதா கோரியது. ஆனால், திருநாவுக்கரசரை நிறுத்தக் கூடாது என்று பாரதிய ஜனதா தலைவர்களிடம் கூறிவிட்ட ஜெயலலிதா, அந்த தொகுதியை ஒதுக்க மறுத்துவிட்டார். அதேபோல், பா.ம.க. வலிமையாக உள்ள தருமபுரி, சிதம்பரம், புதுச்சேரி ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற முடியாது என்பதால் அத்தொகுதிகளை பாரதிய ஜனதாவுக்கு ஒதுக்கினார் ஜெயலலிதா.
பாரதிய ஜனதாக் கட்சியில் தேசிய பொருளாளராக இருந்த சுகுமாரன் நம்பியார் அவரது சமூகத்தினர் அதிகம் வாழும் தென்சென்னை தொகுதியில் போட்டியிட விரும்பினார். ஆனால், அவருக்கு சம்பந்தமே இல்லாத வட சென்னை தொகுதியை ஜெயலலிதா ஒதுக்கினார். திருநாவுக்கரசருக்காக புதுக்கோட்டைத் தொகுதியை தர மறுத்ததுடன், பிற தொகுதிகளில் அவரை நிறுத்தினால் கூட்டணியை முறித்துக் கொள்ளப் போவதாகவும் ஜெயலலிதா மிரட்டினார். தனிக்கட்சி நடத்தி வந்த திருநாவுக்கரசரை பாரதிய ஜனதாவுக்கு அழைத்து வந்து அமைச்சர் பதவி வழங்கிய பாஜக தலைவர்கள், அவரை 2004 தேர்தலில் நடாளுமன்ற உறுப்பினராக்குவதாக உறுதி அளித்திருந்தனர். ஜெயலலிதாவின் பிடிவாதத்தால் அதை நிறைவேற்ற முடியாததால் அவரை மத்திய பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினர் ஆக்கினார்கள்.
சோனியா மீது கடும் தாக்கு
இத்தகைய குழப்பமான சூழலில் அதிமுக கூட்டணியும், ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்புடன் ஜனநாயக முற்போக்குக் கூட்டணியும் மக்களவைத் தேர்தலை சந்தித்தன. தேர்தல் பிரச்சாரத்தின் போது தேர்தலில் வெற்றி பெற்றால் மக்களுக்கு என்னென்ன நன்மைகளை செய்வோம் என்பதைக் கூறி எங்கள் அணி வாக்கு சேகரித்தது.
ஆனால், அதிமுக கூட்டணி வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டது. அதிலும் குறிப்பாக அதிமுக பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தனிப்பட்ட முறையில் கடுமையாக விமர்சித்தார். ‘‘அரசியல் அனுபவம் இல்லாத அரசியல் கத்துக்குட்டி சோனியா காந்தி. அயல்நாட்டு இறக்குமதியான அன்டோனியா மைனோ என்ற சோனியா காந்தி, அரசியலில் அரைவேக்காடு. அவர் இந்தியர் அல்ல. இத்தாலியர். தேச பக்தி இல்லாவிட்டாலும், பதிபக்தியாவது இருக்க வேண்டும் அல்லவா? பதிபக்தி இருந்திருந்தால், சதிகாரர்களோடு கூட்டணி சேர்ந்திருப்பாரா? கணவருக்கே விசுவாசம் காட்டாதவர், கணவரது தேசத்துக்கு மட்டும் எப்படி விசுவாசமாக இருப்பார்?’’ என்று ஜெயலலிதா முன்வைத்த விமர்சனங்கள் மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தின. ஜெயலலிதா மீது மக்களுக்கு ஏற்கனவே இருந்த கோபத்துடன் இந்த கோபமும் சேர்ந்து கொண்டது. இது தேர்தல் முடிவுகளில் எதிரொலித்தது.
அமோக வெற்றி
அதன் விளைவு... தமிழகம் மற்றும் புதுவையில் மொத்தமுள்ள 40 இடங்களிலும் அதிமுக அணி படுதோல்வி அடைந்தது. ஜனநாயக முற்போக்குக் கூட்டணி 40 இடங்களையும் வென்றது. பா.ம.க. 6 இடங்களில் வெற்றி பெற்றது. தேசிய அளவிலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்றது. மத்தியில் மன்மோகன்சிங் தலைமையில் கூட்டணி அரசு அமைந்தது. அதில் தமிழகத்திலிருந்து திமுக சார்பில் டி.ஆர். பாலு, ஆ.ராசா, தயாநிதி மாறன், காங்கிரஸ் சார்பில் ப.சிதம்பரம், மணி சங்கர் அய்யர், பா.ம.க. சார்பில் அன்புமணி ஆகியோர் கேபினட் அமைச்சர்களாகவும், திமுகவைச் சேர்ந்த பழனிமாணிக்கம், ரகுபதி, வெங்கடபதி, சுப்புலட்சுமி ஜெகதீசன் காங்கிரஸ் சார்பில் ஜி.கே.வாசன், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், பா.ம.க.வின் அரங்க.வேலு ஆகியோர் இணை அமைச்சர்களாகவும் பதவி ஏற்றனர். தமிழகத்திற்கு அதுவரை இல்லாத அளவில் மொத்தம் 13 அமைச்சர் பதவிகள் கிடைத்தன. அதனால் தமிழகத்திற்கு பல நன்மைகளும் கிடைத்தன.
அடுத்து மழை நிவாரணமும், மரணங்களும்!
(நாளை விளக்குகிறேன்)