
ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் தினகரன், மக்கள் வெறுப்புக்கு பயந்து, பிரச்சாரத்தின் எந்த நிலையிலும் சசிகலாவின் பெயர், படம் என எதுவும் வராமல் கவனமாக இருந்து வருகிறார்.
அவருக்கு ஆதரவாக காலத்தில் குதித்துள்ள, அமைச்சர்கள், எம்.எல்.ஏ க்கள் தொண்டர்கள் என அனைவருமே சசிகலாவின் பெயரை கூட உச்சரிக்காமல் தவிர்த்து வருகின்றனர்.
சசிகலாவின் தயவால் பதவி பெற்ற தினகரன், அவரது பெயரை வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்து வருவதாக, குடும்ப உறவுகளே கடும் கோபத்தில் இருக்கின்றனர்.
ஆனாலும், தேர்தலில் குதித்துள்ள தினகரனை வெற்றி பெற வைப்பதே இலக்கு என்பதால், சசிகலாவும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், குடும்ப உறவுகளை சமாதானம் ஆகுமாறு கூறியுள்ளார்.
இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, செய்தியாளர் சந்திப்பில் சசிகலா படத்தை போட்டு ஓட்டு கேட்டால் வெற்றி பெற முடியாது என்பதை மறைமுகமாக ஒப்புக்கொண்டுள்ளார்.
ஆர்கே நகர் இடைதேர்தல் தொடர்பான ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்திதார் எடப்பாடி பழனிச்சாமி.
அப்போது, ஆர்.கே.நகர் தேர்தலில், சசிகலா படத்தை வைத்து ஏன் பிரசாரம் செய்யவில்லை என்று ஓபிஎஸ் அணியினர் கூறி வருகிறார்களே? என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு, என்ன வெற்றி வாய்ப்பு இருக்கிறதோ, அதை வைத்து நாங்கள் பிரசாரம் செய்கிறோம் என்று சிறிதும் யோசிக்காமல் கூறினார் முதல்வர்.
அதாவது, சசிகலா படத்தை போட்டு ஓட்டு கேட்டால் வெற்றி பெற முடியாது என்பதைத்தான், அப்படி சொல்கிறீர்களா என்று கேட்டபோது, அதை காதில் வாங்காதது போல பேட்டியை முடித்துக் கொண்டார்.
முதல்வர் எடப்பாடியின், முன் யோசனை இல்லாத இந்த பதில் தினகரனுக்கு தர்மம் சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளதாக, அவரது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.